ராமநாதபுரம் மாவட்டத்தின் பரமக்குடி தொகுதி இடைத்தேர்தலுக்கான பரப்புரை சுடுபிடித்துள்ளது. திமுக சார்பாக சம்பத்குமார், அதிமுக சார்பாக சதன் பிரபாகரன், அமமுக சார்பாக முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் முத்தையா ஆகியோர் போட்டியிடுகின்றனர். இதனால் மும்முனை போட்டி ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில், பரபரப்பான தேர்தல் பரப்புரைக்கு இடையே திமுக வேட்பாளர் சம்பத்குமார் நமது ஈடிவி பார்த்துக்கு பிரத்யேக பேட்டி அளித்தார்.
அதில், பரமக்குடி மக்களின் பிரதான பிரச்னையான பாதாள சாக்கடை திட்டம் சரி செய்து வைகை ஆற்றில் கலக்காமல் இருக்க நடவடிக்கைகள் எடுப்பதே முதன்மையானது, அதேபோல் கொசு ஒழிப்பு, போக்குவரத்து நெரிசல் சரி செய்வது தேர்தல் அறிக்கையிலேயே அளித்துள்ளோம் என்றார்.
அதேபோல், “பரமக்குடியில் ஒரு அரசு பொறியியல் கல்லூரி அமைக்கப்படும் என தேர்தல் அறிக்கையில் அறிவிக்கப்பட்டுள்ளது. நெசவாளர்களுக்கு ஜி.எஸ்.டி வரி குறைப்புக்கு தேவையான நடவடிக்கைகள் ஏற்பாடு செய்யப்படும். எங்களைப் பொறுத்தவரை முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் முத்தையா மட்டுமல்ல களத்தில் உள்ள எல்லோரும் போட்டியாளர்கள்தான். இத்தேர்தலில் குறைந்தபட்சமாக 25 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவேன்” எனத் தெரிவித்தார்.