ராமநாதபுரம்:பரமக்குடி நகைக்கடை பஜாரை சேர்ந்த ரமேஷுக்கும், ராமநாதபுரத்தைச் சேர்ந்த சரண்யாவுக்கும் கடந்த 2007ஆம் ஆண்டு திருமணம் நடந்துள்ளது. இவர்களுக்கு ரூபேஷ்(13) என்ற மகனும், ஹர்சிதா(11) என்ற மகளும் உள்ளனர்.
ரமேஷ் பரமக்குடி நகைக்கடை பஜாரில் நகைக்கடை நடத்திவருகிறார். தொழிலில் கடந்த இரண்டு ஆண்டுகளாக நஷ்டம் ஏற்பட்டதையடுத்து சரண்யாவின் நகைகளை விற்று தொழில் நடத்திவந்துள்ளார்.
மேலும், நலிவுற்ற நிலையில் கடன் வாங்கி ரமேஷ் தொழில் நடத்திவந்துள்ளார். இந்நிலையில் கடனை அடைக்க முடியாததால் கடன் கொடுத்தவர்கள் ரமேஷை தொடர்ந்து தொந்தரவு செய்துள்ளனர். இதனால், சரண்யாவுக்கும், ரமேஷுக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டு தினசரி சண்டை நடந்துவந்துள்ளது.
நாள்தோறும் மகனை அடமானம் வைக்கும் தந்தை
கடன் கொடுத்தவர்கள் தொடர்ந்து தொந்தரவு செய்ததால் மகன் ரூபேஷை கடன் பெற்றவர்களிடம் காலை ஒப்படைத்துவிட்டு பணம் செலுத்திய பின்பு மீண்டும் இரவு வீட்டிற்கு அழைத்து வருவதை வழக்கமாக கொண்டிருந்துள்ளார்.
கடந்த இரண்டு மாதங்களாக இது நடந்துவர இதுதொடர்பாக சரண்யா பரமக்குடி நகர் காவல் நிலையத்தில் புகார் செய்துள்ளார். இருப்பினும், காவலர்கள் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை எனத் தெரிகிறது. இந்நிலையில், ரமேஷ் சரண்யாவை வீட்டிலிருந்து வெளியே விரட்டி விட்டுள்ளார்.