ராமநாதபுரம் மாவட்டம் திருநகர் பகுதியை சேர்ந்தவர் மணிகண்டன் (38). இவர், தனது 15ஆவது வயதில் கிரிக்கெட் விளையாடியபோது ஏற்பட்ட விபத்தில் ஒரு கால் இழந்தார். அதன் பிறகு தன்னம்பிக்கையுடன் கல்லூரி படிப்பை முடித்த மணிகண்டன், சமூகத்தின் மீது கொண்ட அக்கறையால் தன்னால் முடிந்த உதவிகளை செய்து வந்துள்ளார். சமூகப் பணிகளில் ஈடுபட்டுவந்த மணிகண்டன், தனது ஒற்றைக்காலில் சைக்கிளை அழுத்தியபடி சிவகங்கை முதல் சென்னை வரை இரண்டு முறை பயணம் செய்து சாதனை படைத்துள்ளார்.
இரண்டு கால்கள் இருந்தும் உழைப்பை நம்பாமல் சோம்பேறியாய் வாழும் சிலருக்கு மணிகண்டன் உந்து சக்தியாய் இருப்பது அனைவரையும் நெகிழ வைத்துள்ளது. இந்நிலையில், காற்று மாசை கட்டுப்படுத்த விழிப்புணர்வு ஏற்படுத்த மணிகண்டன் விரும்பினார். அதன்படி கடந்த டிசம்பர் 13ஆம் தேதி கன்னியாகுமரியில் ஒற்றைக் கால் மூலம் சைக்கிள் பயணத்தை தொடங்கி தூத்துக்குடி, நெல்லை, மதுரை, கோவை, தருமபுரி, சேலம் வழியாக ஜனவரி 1ஆம் தேதி சென்னை மெரினா கடற்கரையில் உழைப்பாளர் சிலை முன் இந்த பயணத்தை நடிகர் விவேக் முடித்து வைத்தார்.