இலங்கை, கன்னியாகுமரி கடல்களுக்கு இடையே ஏற்பட்ட மேலடுக்கு சுழற்சி காரணமாக கடந்த 4 நாட்களுக்கு மேலாக ராமநாதபுரம் மற்றும் கடலோர மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. ராமநாதபுரத்தில் உள்ள பரமக்குடி, திருவாடானை, கடலாடி, முதுகுளத்தூர், சாயல்குடி, ராமேஸ்வரம் உள்ளிட்ட மாவட்டத்தின் பெரும்பாலான பகுதிகளில் தினசரி இரண்டு சென்டி மீட்டருக்கு அதிகமான மழை பெய்துவருகிறது.
தொடர் மழை ராமநாதபுரத்தில் 1 லட்சம் ஏக்கர் நெற்பயிர் நாசம்!
ராமநாதபுரம்: தொடர் மழை காரணமாக மாவட்டத்தில் சுமார் ஒரு லட்சம் ஏக்கர் பரப்பளவிலான நெற்பயிர்கள் நீரில் மூழ்கி சேதமடைந்துள்ளது என்று அம்மாவட்ட ஆட்சியர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் தெரிவித்துள்ளார்.
இதன் காரணமாக தை மாதத்திற்கு அறுவடைக்கு தயாராக இருந்த மொத்த நெற்பயிர்கள் மழை நீரில் மூழ்சி மீண்டும் முளைக்க தொடங்கியுள்ளது. இதனால் அறுவடை செய்ய எதிர்பார்ப்புடன் காத்திருந்த விவசாயிகள் பெரும் ஏமாற்றமும், நஷ்டமும் அடைந்ததுள்ளனர். இதற்கு உரிய இழப்பீட்டுத் தொகை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மாவட்டத்தின் பல்வேறு பகுதியில் இருக்கும் விவசாயிகள் தொடர்ந்து மாவட்ட நிர்வாகிகளுக்கு கோரிக்கை வைத்து வருகின்றனர்.
இந்நிலையில், இன்று(ஜன.13) செய்தியாளர்களை சந்தித்த ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர், " ராமநாதபுரத்தில் கடந்த 4 நாட்களுக்கு மேலாக பெய்த தொடர் மழையின் காரணமாக மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் நெற்பயிர்கள் மழை நீரில் மூழ்கி பாதிப்படைந்துள்ளன. இதுகுறித்து நானும் தொடர்ச்சியாக ஆய்வு மேற்கொண்டு வருகிறேன். மாவட்டத்தில் பயிரிடப்பட்ட 133 ஹெக்டேரில் சுமார் 40,000 ஹெக்டேர் பரப்பளவிலான நெற்பயிர்கள் நீரில் மூழ்கியுள்ளன. அதாவது ஒரு லட்சம் ஏக்கர் பரப்பளவிலான நெற்பயிர்கள் நீரில் மூழ்கி சேதமடைந்துள்ளது. இதுகுறித்து வேளாண் துறை அலுவலர்கள் மூலம் கணக்கெடுக்கும் பணி நடைபெற்றுவருகிறது. முழுமையான விவரம் கணக்கெடுப்பு பணி முடிந்தவுடம் தெரியவரும்" என்று தெரிவித்தார்.