தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

‘டெல்டா பகுதிகளில் எண்ணெய் கிணறுகளை அனுமதிக்கக்கூடாது’ - அன்புமணி ராமதாஸ் - காவிரி டெல்டா மாவட்டங்கள்

ராமநாதபுரம்: காவிரி டெல்டா மாவட்டங்களில் எண்ணெய் கிணறுகள் தோண்ட அனுமதியளிக்கக் கூடாது என பாமக இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

அன்புமணி ராமதாஸ்

By

Published : Jun 28, 2019, 9:54 AM IST

Updated : Jun 28, 2019, 1:23 PM IST

இது குறித்து அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘ராமநாதபுரம் மாவட்டம் முதல் கடலூர் வரையிலான காவிரி பாசன மாவட்டங்களை உள்ளடக்கிய பகுதிகளில் 104 எண்ணெய் கிணறுகள் தோண்ட ஓ.என்.ஜி.சி நிறுவனம் தீர்மானித்திருக்கிறது. காவிரி பாசன மாவட்டங்களின் இயற்கை வளங்களை சூறையாடும் வகையிலும், விவசாயத்தை அழிக்கும் வகையிலும் எண்ணெய் கிணறுகளை அமைக்க அரசு துடிப்பது கண்டிக்கத்தக்கதாகும்.

காவிரி பாசன மாவட்டங்கள் ஏற்கனவே வறட்சியால் கடுமையாக பாதிக்கப்பட்டு, வேளாண் சாகுபடி பரப்பு குறைந்து வரும் நிலையில், இப்போது புதிதாக செயல்படுத்தப்படவுள்ள இந்தத் திட்டம் காவிரி பாசன மாவட்டங்களை பாலைவனமாக மாற்றிவிடும். காவிரி பாசன மாவட்டங்களில் இதுவரை 200-க்கும் கூடுதலான கச்சா எண்ணெய் கிணறுகளை அமைத்துள்ள ஓ.என்.ஜி.சி நிறுவனம், அவற்றிலிருந்து கோடிக்கணக்கான டன் கச்சா எண்ணெயை எடுத்து வருகிறது. இதனால் விவசாயம் பாதிக்கப்படுவது ஒருபுறமிருக்க, மனிதர்களுக்கும், சுற்றுச் சூழலுக்கும் சரி செய்ய முடியாத அளவுக்கு போசமான பாதிப்புகள் ஏற்பட்டுள்ளனது.

காவிரி பாசன மாவட்டங்களில் எண்ணெய் கிணறுகள் என்ற எமன் அதிக அளவில் அமைக்கப்பட்டது கடந்த 30 ஆண்டுகளில் தான். இதற்கு முக்கியக் காரணமாக இருந்தது திமுக. காவிரி பாசன மாவட்டங்களில் 104 எண்ணெய், எரிவாயு கிணறுகளை அமைக்கும் ஓஎன்ஜிசி நிறுவனத்தின் முடிவு அங்குள்ள மக்களிடமும், விவசாயிகளிடமும் பெரும் அச்சத்தையும், கவலையையும் ஏற்படுத்தியுள்ளது. எனவே, இந்த எண்ணெய்க் கிணறுகளை அமைக்க ஓஎன்ஜிசி நிறுவனத்திற்கு சுற்றுச்சூழல் அனுமதியை மத்திய அரசு வழங்கக்கூடாது. இவ்விஷயத்தில் மக்களின் உணர்வுகளை மத்திய அரசுக்கு எடுத்துக்கூறி இத்திட்டத்தை தடுக்க தமிழக அரசும் நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்று கோரிக்கை விடுத்துள்ளார்.

Last Updated : Jun 28, 2019, 1:23 PM IST

ABOUT THE AUTHOR

...view details