ராமநாதபுரம்:ராமநாதபுரம் மாவட்டத்தில் மே 18ஆம் தேதி 870 பேர், மே 19ஆம் தேதி 856 பேர் இரண்டு நாள்களும் சேர்த்து மொத்தமாக ஆயிரத்து 726 பேர் மட்டுமே தடுப்பூசி செலுத்திக் கொண்டுள்ளனர். மருத்துவர்களும், அரசும் நோயைக் கட்டுப்படுத்த தடுப்பூசி மட்டுமே பெரிய உதவி செய்யும் என்று அறிவித்திருக்கும் நிலையிலும் மக்கள் மத்தியில் போதிய விழிப்புணர்வு இல்லை என மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.
பல்வேறு வதந்திகள் மக்கள் மத்தியில் உலா வருவதால் தடுப்பூசி எடுத்துக்கொள்ள மக்கள் அச்சமடைகின்றனர். இதற்கு அரசு முறையான விழிப்புணர்வைச் செய்து மக்களை தடுப்பூசி செலுத்திக்கொள்ள அறிவுறுத்த வேண்டும். இல்லையென்றால் உயிரிழப்பு விகிதம் வரும் நாள்களில் அதிகரிக்க வாய்ப்புள்ளது என மருத்துவர்கள் கவலைத் தெரிவிக்கின்றனர்.
'தடுப்பூசி குறித்து போதிய விழிப்புணர்வு இல்லை'- மருத்துவர்கள் வேதனை! ராமநாதபுரம் சுகாதாரத் துறை துணை இயக்குநர் பொற்கொடியிடம் தடுப்பூசி செலுத்திக்கொள்வோரின் விகிதம் குறைவாக உள்ளது குறித்து கேட்டபோது, "கடந்த மாதங்களில் சுய உதவி குழுக்கள், கிராமப்புற சுகாதார செவிலியர்களைக் கொண்டு தடுப்பூசி செலுத்தும் பணி நடைபெற்று வந்தது. அவர்களில் தடுப்பூசி செலுத்தச் சென்ற பலர் தொற்றின் காரணமாக பாதிக்கப்பட்டு சிகிச்சைப் பெறும் நிலை ஏற்பட்டதால் தடுப்பூசி செலுத்துவதில் தொய்வு ஏற்பட்டுள்ளது" எனத் தெரிவித்தார்.
மேலும், "இரண்டு முறை கரோனா தடுப்பு ஊசி செலுத்திக் கொண்டவர்கள் யாரும் இறக்கவில்லை. மக்கள் நம்பிக்கையுடன் தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டும். இதனால் உயிரை தற்காத்துக்கொள்ள முடியும்" என்றார்.
இதையும் படிங்க:’தடுப்பூசி செலுத்திக்கொள்ள மருத்துவப் பணியாளர்களுக்கு தயக்கமா...’ தரவுகள் சொல்வது என்ன?