வங்கக் கடலில் உருவாகியுள்ள காற்றழுத்தத் தாழ்வு நிலையால் நாளை முதல் தமிழ்நாட்டில் அடுத்த 24 மணி நேரத்திற்கு லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. குறிப்பாக, திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளது.
இந்நிலையில், ராமநாதபுரம் மாவட்டம் பாம்பன் துறைமுகத்தில் ஒன்றாம் எண் புயல் எச்சரிக்கைக் கூண்டு ஏற்றப்பட்டுள்ளது. வங்கக் கடலின் தென்மேற்கு திசையில், இலங்கைக்கு தெற்கே காற்றழுத்தத் தாழ்வு நிலை உருவாகியுள்ளது.
பாம்பன் துறைமுகத்தில் ஒன்றாம் எண் புயல் எச்சரிக்கைக் கூண்டு ராமநாதபுரத்தில் கனமழை, சூரைக் காற்று வீசக்கூடும் என்பதால் மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்கச் செல்ல வேண்டாம் என்று மீன்வளத்துறை சார்பாக கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. மீறி கடலுக்கு மீன்பிடிக்கச் செல்வோர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் மீன்வளத்துறை அலுவலர்கள் தெரிவித்துள்ளனர். மேலும், மீனவர்கள் தங்களது உபகரணங்களைப் பாதுகாப்பான இடத்தில் வைக்கும்படியும் அறிவுறுத்தியுள்ளது.
இதையும் படிங்க: 'மீனவர்கள் கடலுக்குச் செல்ல வேண்டாம்!' - மீன்வளத் துறை எச்சரிக்கை