ராமநாதபுரம் மாவட்டம் பசும்பொன்னில் வருகின்ற 30ஆம் தேதி முத்துராமலிங்கத் தேவரின் 113ஆவது ஜெயந்தி விழா கொண்டாடப்படவுள்ளது. இதில் பின்பற்ற வேண்டிய வழிமுறைகள் குறித்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கார்த்திக் அறிக்கையை வெளியிட்டுள்ளார்.
அதில், "கரோனா வைரஸ் பெருந்தொற்று பரவாமல் கட்டுப்படுத்துவதற்காக மத்திய மாநில அரசுகளின் வழிகாட்டுதலின்படி தேவர் ஜெயந்திக்கு வருவோர் முகக்கவசம், கையுறை அணிதல், தகுந்த இடைவெளி போன்ற முக்கிய வழிகாட்டுதல்களை கடைப்பிடிக்க வேண்டும்.
திறந்தவெளி வாகனங்களில் வர அனுமதி இல்லை. பதிவுபெற்ற அரசியல் கட்சிகளின் தலைவர்கள் ஆட்சியரிடம் அனுமதி பெற்ற நேரப்படியே அனுமதிக்கப்படுவார்கள். இசை வாத்தியம், வெடி, ஆயுதங்களுக்கு அனுமதியில்லை.
வாகனங்களில் சாதி, மத உணர்வுகளைத் தூண்டும் வாசகங்கள் அடங்கிய பேனர்களைக் கட்டிவரவோ கோஷங்களை எழுப்பவோ கூடாது. அன்னதானகூடம் அமைத்து அன்னதானம் பரிமாறி வழங்குவதற்கு அனுமதி இல்லை.
தேவர் ஜெயந்தி விழாவுக்கு வெளிமாவட்டங்கள், வெளியூர்களிலிருந்து பொதுமக்கள் பசும்பொன் வருவதற்கு மாவட்ட நிர்வாகத்தால் அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. மேற்கண்ட உத்தரவுகளைத் தவறாமல் கடைப்பிடிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்" எனக் குறிப்பிட்டிருந்தார்