ராமநாதபுரத்தில் பிரதம மந்திரி கிராம சாலைகள் திட்டத்தின்கீழ் ஆப்பனுாரிலிருந்து மங்கலம் வரையிலான சாலைகள் அமைக்கப்பட்டுள்ளன. இதைப்போல் தமிழ்நாடு கிராமபுறச் சாலைகள் மேம்பாட்டுச் திட்டத்தின்கீழ் சாயல்குடி வேம்பார் சாலையிலிருந்து நரிப்பையூர் கடற்கரை சாலை வரை, மாணிக்கம் நகர் சாலை உள்ளிட்ட சாலைகள் அமைக்கப்பட்டுள்ளன.
இந்நிலையில் ராமநாதபுரம் மக்களவை உறுப்பினர் நவாஸ் கனி கடந்த வாரம் இந்தச் சாலைகளின் தரம் குறித்து ஆய்வுசெய்தார்.
இது குறித்து அவர் அறிக்கை ஒன்றையும் வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:
அனைத்துச் சாலைகளும் மிகவும் மோசமான நிலையிலும், தரக் குறைவான நிலையிலும் உள்ளன. சாலைகள் அமைப்பதற்காக அனைத்து உட்பொருள்களும் குறைவாக பயன்படுத்தப்பட்டுள்ளன.
சாலைகளில் மாதிரிகளைப் பெற்று அதனை ஆய்வுக்காக அனுப்ப உள்ளேன். மேலும் தரமில்லாமல் அமைக்கப்பட்ட சாலைகளை தேசிய தரக் கண்காணிப்பகம் ஆய்வுசெய்து இச்சாலை தரம் உடையதாக உள்ளது என எந்த முகாந்திரத்தில் சான்று அளித்தது எனக் கேள்வி எழுப்பி உள்ளேன்.