தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

'உயிரிழந்த மீனவர்களின் குழந்தைகள் கல்விச்செலவை திமுக ஏற்கும்' - ஸ்டாலின் - மு.க. ஸ்டாலின் தேர்தல் பரப்புரை ராமநாதபுரம்

ராமநாதபுரம்: 'உங்கள் தொகுதியில் ஸ்டாலின்' என்ற பரப்புரையில் பேசியபோது இலங்கை கடற்படைத் தாக்குதலில் உயிரிழந்த மீனவர்களின் குழந்தைகள் கல்விச் செலவை திமுக ஏற்கும் என அக்கட்சியின் தலைவர் மு.க. ஸ்டாலின் உறுதியளித்துள்ளார்.

MK stalin speech
மு.க. ஸ்டாலின் பிரச்சார பேச்சு

By

Published : Feb 5, 2021, 6:53 AM IST

'உங்கள் தொகுதியில் ஸ்டாலின்' என்ற பரப்புரையுடன் தமிழ்நாடு முழுவதும் இரண்டாம்கட்ட சுற்றுப்பயணத்தை மேற்கொண்டுவருகிறார் திமுக தலைவர் மு.க. ஸ்டாலின். ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி தொகுதிக்குள்பட்ட தெளிச்சாத்தநல்லூர் பகுதியில் தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டார்.

234-இலும் நாமே!

அப்போது, பொதுமக்களிடம் குறைகளைக் கேட்டறிந்த அவர், "நான் முதலமைச்சர் ஆனவுடன் 100 நாள்களுக்குள் உங்கள் குறைகளைத் தீர்க்கவில்லை என்றால் நீங்கள் நேரடியாக கோட்டையில் உள்ள எனது அறைக்கு வந்து என்னிடம் நேரடியாகக் கேட்கலாம்" என்று கூறினார்.

தொடர்ந்து பேசிய அவர், "வரும் தேர்தலில் திமுக 200 தொகுதிகளில் வெற்றிபெறும் என்று சொன்னேன். ஆனால் போறபோக்கைப் பார்த்தால் 234 தொகுதிகளிலும் வெற்றிதான் எனத் தோன்றுகிறது. நான் ஆணவத்தால் இதைச் சொல்லவில்லை. மக்கள் வரவேற்பைப் பார்க்கும்போது அப்படித்தான் தெரிகிறது.

உரிமையைத் தட்டிக்கேட்கும் ஆட்சியாக திமுக ஆட்சி இருக்கும்

தற்போது ஆட்சியில் உள்ள அதிமுக அரசு, வெள்ளம் வந்தாலும் சரி, புயல் வந்தாலும் சரி, அதைக் கண்டுகொள்ளாத ஆட்சியாகத்தான் இருக்கிறது.

சங்கரா சங்கரா

நிவர் புயல் நிவாரணங்களை மத்திய அரசு இன்னும் தராமல் இழுத்தடிக்கிறது. அதைத் தட்டிக் கேட்கும் அரசாக இல்லாமல், கூனிக்குறுகி காலில் விழும் அரசாகத்தான் தற்போதைய அரசு இருக்கிறது.

ஆனால் திமுக அதைத் தட்டிக்கேட்கும் அரசாக ஆட்சி அமைக்கும். மக்களின் குறைகள் பெறப்பட்டு திமுக ஆட்சிக்கு வந்து 100 நாள்களில் அதை நிறைவேற்ற தனித் துறை அமைக்கப்படும். ஒவ்வொரு மனுவின் மீதும் எனது தலைமையில் நடவடிக்கை எடுக்கப்படும்.

கடைசி காலத்திலும் டெண்டர் விட்டு சம்பாதிக்கும் அதிமுக ஆட்சி

அதிமுக அரசு சாகும் நேரத்தில்கூட சங்கரா சங்கரா என்பதைப் போல, கடைசி மூன்று மாதத்தில்கூட டெண்டர் விட்டுக்கொண்டிருக்கிறது.

மீனவக் குழந்தைகள் கல்விச் செலவு

2013ஆம் ஆண்டு ஆசிரியர் தகுதித் தேர்வில் 80 ஆயிரம் பேர் வெற்றிபெற்றும் இன்னும் பணியமர்த்தப்படாமல் உள்ளனர். திமுக ஆட்சிக்கு வந்தவுடன் எந்த ஆண்டு தகுதித் தேர்வு எழுதி வெற்றிபெற்றிருந்தாலும், கையூட்டுப் பெறாமல் அவர்களின் பணி நியமனம் செய்யப்படும்.

ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சிபெற்றவர்களுக்குப் பணி நியமனம்

இலங்கை கடற்படையால் கொல்லப்பட்ட நான்கு மீனவர்களின் குழந்தைகள் கல்விச் செலவை திமுக ஏற்கும். விவசாயிகளுக்கு காப்பீட்டுத் தொகை வராததால் இந்த ஆண்டு பொங்கல் துன்ப பொங்கலாகத்தான் அவர்களுக்கு இருந்தது.

ஊழலாட்சித் துறை அமைச்சர்

ஒரு மாதத்துக்கு முன்பு அதிமுக அமைச்சர்கள் நான்கு பேர் மீது ஊழல் புகாரை தமிழ்நாடு ஆளுநரிடம் அளித்தோம். அதன் மீது மத்திய புலனாய்வு அமைப்பு (சிபிஐ) விசாரணை அமைக்க நீதிமன்றம் கூறியது. ஆனால் அதை நேரில் சந்திக்காமல் டெல்லிக்குச் சென்று இந்த வழக்கை விசாரிக்க இடைக்காலத் தடை வாங்கி உள்ளனர்.

அமைச்சர் வேலுமணியை உள்ளாட்சித் துறை என்று கூறாமல் ஊழலாட்சித் துறை அமைச்சர் என்றுதான் கூற வேண்டும். முதலமைச்சர் பழனிசாமியைவிட அமைச்சர் வேலுமணிதான் ஊழல் நிறைந்தவர்.

எழுவர் விடுதலை - அரசியல்

பேரறிவாளன் உள்பட ஏழு பேரின் விடுதலை தொடர்பாக இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இந்த விவகாரம் தொடர்பாக சட்டப்பேரவையில் அதிமுக தீர்மானம் நிறைவேற்றி இரண்டு ஆண்டுகள் ஆகியும், அவர்களை விடுதலை செய்யாமல் வேடிக்கை மட்டும் பார்க்கிறது.

ஏழு பேர் விடுதலையை வைத்து திமுக அரசியல் செய்கிறது என்று கூறுகிறார் முதலமைச்சர். அவர்கள் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்காததால்தான் நாங்கள் பேசுகிறோம்" என்றார்.

இதையும் படிங்க: சசிகலா வருகை! தூக்கம் தொலைத்த அதிமுக தலைமை!

ABOUT THE AUTHOR

...view details