ராமநாதபுரம் மாவட்ட கைத்தறி துறை மற்றும் துணி நூல் துறை சார்பில் ஐந்தாவது தேசிய கைத்தறி தினம் பரமக்குடியில் கொண்டாடப்பட்டது. விழாவில் தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் மணிகண்டன், மாவட்ட ஆட்சியர் வீரராகவ ராவ் ஆகியோர் கலந்துகொண்டு, ரூபாய் 15.82 லட்சம் மதிப்புள்ள நலத்திட்ட உதவிகளை நெசவாளர்களுக்கு வழங்கினர்.
பின்னர் செய்தியாளர்களிடம், அமைச்சர் மணிகண்டன் பேசுகையில், “தமிழ்நாடு அரசு கேபிள் கட்டணம் குறைத்தது தொடர்பாக, முதலமைச்சர் என்னிடம் கலந்து ஆலோசிக்கவில்லை. இப்போது, தமிழ்நாடு அரசு குறைத்துள்ள அரசு கேபிள் கட்டணத்தால் அரசுக்கு மாதந்தோறும், சுமார் 27 கோடி ரூபாய் வருவாய் இழப்பு ஏற்படுகிறது. தற்போது புதிதாகப் பொறுப்பேற்றுள்ள தமிழ்நாடு அரசு கேபிள் டிவி தலைவர், கே. ராதாகிருஷ்ணன் கேபிள் டிவி நடத்துவதில் அனுபவம் உள்ளவர்.
செய்தியாளர்கள் சந்திப்பில் தகவல் தொழில்நுட்பதுறை அமைச்சர் மணிகண்டன் அவர் சமீபத்தில் பேசியது அரசு செட்டாப் பாக்ஸ்களை மாற்றி, தனியார் நிறுவன செட்டாப் பாக்ஸ்களை வாடிக்கையாளர்களுக்கு வழங்கக்கூடாது என்று எச்சரிக்கை விடுத்துள்ளார். ஆனால் அவரே 'அக்சயா' என்ற தனியார் கேபிள் நிறுவனத்தை நடத்திவருகிறார். அந்த நிறுவனத்தில் இரண்டு லட்சம் வாடிக்கையாளர்கள் உள்ளனர். முதலில் அவர்களை, அரசு கேபிளுக்கு மாற்றினாலே, அரசுக்கு நல்ல வருவாய் கிடைக்கும். பிறகு அவர் மற்றவர்களை எச்சரிக்கலாம்.
நான் முதலில் மருத்துவர், தற்போது அமைச்சர், அதற்கான பணியைத்தான் தற்போது நான் செய்ய வேண்டும்” என்றார். இதன் மூலம் கேபிள் டிவி தலைவர் பதவியில் இருக்கும் கே. ராதாகிருஷ்ணனுக்கும், அமைச்சருக்கும் இடையில் புகைச்சல் இருப்பது உறுதியாகியிருப்பதாக அரசியல் விமர்சகர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.