ராமநாதபுரம் : ராமநாதபுரம் மாவட்டத்தில், மதுரை முதல் பரமக்குடிவரையிலான 80 கி.மீ சாலை நான்கு வழி சாலையாக உள்ளது. பரமக்குடியில் இருந்து ராமநாதபுரம் வரையிலான சாலை இரு வழி சாலையாக அமைந்துள்ளது. இந்நிலையில், சத்திரக்குடி போகலூர் இரு வழிச்சாலையில் சுங்கச்சாவடி அமைத்து வாகனங்களுக்கு கட்டணம் வசூல் செய்யப்படுகின்றன.
இதனால் வாகன ஓட்டிகள் பலமுறை புகார் அளித்தும் இரு வழிச்சாலைக்கும் கட்டணம் வசூல் செய்து வருகின்றனர். இந்த சுங்கச்சாவடியை மூடக்கோரி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பாக முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினர் பாலபாரதி தலைமையில் முற்றுகைப் போராட்டம் நடைபெற்றது. இப்போராட்டத்தில் திமுக, காங்கிரஸ், ஆதித்தமிழர் கட்சி, விடுதலைச் சிறுத்தைகள் கட்சி, தமுமுக, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் உள்ளிட்ட அனைத்து கட்சியினரும் பங்கேற்றனர்.