கடந்தாண்டு ஜூன் மாதம் கல்வான் பள்ளத்தாக்கில் இந்திய-சீன ராணுவத்தினரிடையே நடந்த மோதலில் இராமநாதபுரம், கடுக்கலூரைச் சேர்ந்த ஹவில்தார் பழனி உள்ளிட்ட 20 வீரர்கள் வீரமரணம் அடைந்தனர்.
வீரமரணமடைந்த பழனியின் உடல் சொந்த கிராமத்திற்குக் கொண்டுவரப்பட்டு மத்திய- மாநில அரசுகள் சார்பில் ராணுவ மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்பட்டது. இதைத்தொடர்ந்து மத்திய, மாநில அரசுகள், தன்னார்வலர்கள் பழனியின் குடும்பத்திற்கு நிதியுதவி அளித்து ஆதரவாக இருந்தனர்.
தமிழ்நாடு அரசு 20 லட்சம் ரூபாய் நிவாரணமும், வீரர் பழனியின் மனைவிக்கு இராமநாதபுரம் மாவட்ட வருவாய்த்துறையில் இளநிலை உதவியாளர் பணியும் வழங்கியது. இந்நிலையில் வீரமரணம் அடைந்த வீரர் பழனிக்கு ராணுவத்தின் உயரிய விருதான வீர் சக்ரா விருதை மத்திய அரசு அறிவித்துள்ளது.