ராமநாதபுரம்: பரமக்குடி அருகே உள்ள தியாகி இமானுவேல் சேகரன் நினைவிடத்தில் ஆண்டுதோறும் செப்டம்பர் 11ஆம் தேதி நினைவு நாள் அனுசரிக்கப்பட்டது வழக்கம்.
இவரது நினைவு நாள் அன்று உள் மாவட்டம், வெளி மாவட்டங்களை சேர்ந்த பொதுமக்களும், அரசியல் கட்சியை சேர்ந்த பிரமுகர்களும் அவரது நினைவிடத்திற்கு வந்து அஞ்சலி செலுத்துவர். ஆனால் கடந்த 2 ஆண்டுகளாக கரோனா பெருந்தொற்று காரணமாக, அவரது நினைவிடத்திற்கு பொதுமக்கள் அனுமதிக்கப்படவில்லை.
ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் சந்திரகலா ஆலோசனை கூட்டம்
இந்நிலையில் வருகின்ற செப்டம்பர் 11ஆம் தேதி அன்று தியாகி இமானுவேல் சேகரன் நினைவுதினம் அனுசரித்தல் தொடர்பாக, மாவட்ட ஆட்சியர் சந்திரகலா தலைமையில் நேற்று (செப்டம்பர் 2) அனைத்து துறை அலுவலர்கள், சமுதாய தலைவர்கள், பிரதிநிதிகளுடன் ஆலோசனை கூட்டம் நடத்தப்பட்டது.
இக்கூட்டத்தில், மாவட்ட ஆட்சியர் சந்திரகலா கூறுகையில், “கரோனா தொற்று பரவாமல் தடுப்பதற்காகவும், 144 - ன் கீழ் ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளதாலும், பொதுமக்களின் நலன் கருதி செப்டம்பர் 11 அன்று பரமக்குடியில் உள்ள இமானுவேல் சேகரன் நினைவிடத்தில் ராமநாதபுரம் மற்றும் பிற மாவட்டங்களைச் சேர்ந்த பொதுமக்கள் அஞ்சலி செலுத்த வருவதற்கு அனுமதி இல்லை.
பதிவு பெற்ற அரசியல் கட்சி தலைவர்கள், 5 நபர்களுக்கு மிகாமல், மாவட்ட ஆட்சியரிடம் முன் அனுமதி மற்றும் வாகன முன் அனுமதியை பெற்றும் அரசு அறிவித்துள்ள வழிமுறைகளை பின்பற்றியும், தகுந்த இடைவெளியை கடைபிடித்தும் மரியாதை செய்ய அனுமதிக்கப்படுகிறது
முன் அனுமதி
அனுமதி பெற விரும்பும் அரசியல் கட்சித்தலைவர்கள் வருகின்ற செப்டம்பர் 7 ஆம் தேதிக்குள் ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அவர்களிடம் நேரடியாகவோ, collrmd@tn.nic.in என்ற மின்னஞ்சல் மூலமாகவோ விண்ணப்பிக்க வேண்டும்.
தியாகி இமானுவேல் சேகரன் நினைவு நாள் அஞ்சலி செலுத்த அனுமதி பெற்றவர்கள் அனுமதிக்கப்பட்ட வழித்தடங்களில் மட்டுமே நினைவிடத்திற்கு வந்து செல்வதுடன், வரும் வழியில் போக்குவரத்திற்கு இடையூறு செய்யும் வகையில் எந்த இடங்களிலும் வாகனங்கள் நிறுத்தக்கூடாது.
இரண்டு மாவட்ட ஆட்சியரின் முன் அனுமதி பெற்று அஞ்சலி செலுத்த வருபவர்கள் தங்களது சொந்த வாகனங்களில் மட்டும் வர வேண்டும். வாடகை வாகனங்கள், திறந்த வெளி வாகனங்கள், வேன், டிராக்டர், இருசக்கர வாகனங்கள், சைக்கிள் போன்ற வாகனங்களில் வர அனுமதி இல்லை. வாகனத்தின் மேற்கூரையில் பயணம் செய்யக்கூடாது.
கட்டுப்பாடுகள்
அஞ்சலி செலுத்த வரும் வழித்தடங்களில் வெடி போடுவதை கண்டிப்பாக தவிர்ப்பதுடன், ஒலிபெருக்கிகள் ஏதும் பொருத்தி செல்லவோ, சாதி, மத உணர்வுகளை தூண்டும் வாசகங்கள் அடங்கிய பேனர்களை கட்டி வரவோ, கோஷங்களை எழுப்பவோ கூடாது.
அஞ்சலி செலுத்த அனுமதி பெற்றவர்கள் அனுமதிக்கப்பட்ட வழித்தடங்களில் மட்டுமே நினைவிடத்திற்கு வந்து செல்வதுடன், வரும் வழியில் போக்குவரத்திற்கு இடையூறு செய்யும் வகையில் எந்த இடங்களிலும் வாகனங்கள் நிறுத்தக்கூடாது.
அஞ்சலி செலுத்த வரும் தலைவர்கள் அவர்களுக்கு ஒதுக்கப்பட்ட நேரத்தில் மட்டுமே வந்து செல்ல வேண்டும். சமுதாய கொடி ஏற்றுதல், கலை நிகழ்ச்சிகள் நடத்துதல், விளையாட்டு போட்டிகள் நடத்துதல், முளைப்பாரி எடுத்தல், பால்குடம் எடுத்தல், அலங்கார ஊர்தி அணிவகுப்பு, மாட்டு வண்டியில் வருதல், தலைவர்கள் போன்று வேடமணிந்து வருதல் ஆகியவற்றுக்கு அனுமதி இல்லை” என்றார்.
இதையும் படிங்க: புதுச்சேரியின் கடன் ரூ.9,449 கோடி: தணிக்கை குழுவின் பகீர் அறிவிப்பு!