ராமநாதபுரம் மாவட்டம் பாம்பன் பாலம் அருகே குந்துகால் கடற்கரையில் வெளி மாவட்ட படகு ஒன்றிலிருந்து இலங்கைக்கு கடத்தல் பொருட்கள் அனுப்பப்பட உள்ளது என்று கடலோர காவல் படையினருக்கு தகவல் கிடைத்தது.
அதன் அடிப்படையில் குந்துக்கால் கடற்கரையில் கடலோர காவல் படையினர் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது அங்கு பைபர் படகு ஒன்று இயந்திரப் பழுதாகி நின்று கொண்டிருந்தது.
தூத்துக்குடி மாவட்டம் திரேஸ்புரம் ரெடி என்பவருக்கு சொந்தமான பதிவு எண் இல்லாத அந்த பைபர் படகில் 22 மூட்டைகளில் தடை செய்யப்பட்ட கடல் அட்டைகள், மஞ்சள் ஆகியன இருந்தன. விசாரணையில் இந்தப் படகில் தூத்துக்குடி மாவட்டத்தில் இருந்து இலங்கைக்கு கடல் அட்டைகளும், மஞ்சளும் கடத்தப்பட்டது தெரியவந்தது.
இதையடுத்து படகில் இருந்த தூத்துக்குடி லூர்தம்மாள்புரத்தை சேர்ந்த மலையாண்டி, திரேஸ்புரம் மாதா நகரைச் சார்ந்த ஜெயக்குமார், பெலதீன் ஆகிய மூன்று மீனவர்களை கைது செய்த கடலோர காவல் படையினர், படகில் இருந்த 22 மூட்டைகளில் சுமார் 800 கிலோ கடல் அட்டைகளும், 400 கிலோ மஞ்சள் ஆகியவற்றை பறிமுதல் செய்து வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.