தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

Immanuel Sekaran : தியாகி இம்மானுவேல் சேகரனாருக்கு மணிமண்டபம்.. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு! - Immanuel Sekaran news

Freedom Fighter Immanuel Sekaran : சுதந்திர போராட்ட வீரர் இம்மானுவேல் சேகரனாருக்கு 3 கோடி ரூபாய் செலவில் மணிமண்டபம் அமைக்கப்படும் என தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு
இம்மானுவேல் சேகரனுக்கு மணிமண்டபம்

By ETV Bharat Tamil Nadu Team

Published : Sep 11, 2023, 10:32 AM IST

இராமநாதபுரம்:தியாகி இம்மானுவேல் சேகரனாருக்கு பரமக்குடியில் திருவுருவச் சிலையுடன் கூடிய மணிமண்டபம், தமிழ்நாடு அரசின் சார்பில் அமைக்கப்படும் என முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

தியாகி இம்மானுவேல் சேகரனாரின் 66-வது நினைவு நாள் இன்று (செப். 11) தமிழ்நாடு முழுவதும் அனுசரிக்கப்பட்டு வருகிறது. இதனை முன்னிட்டு அவரது திருவுருவ சிலைக்கு தமிழ்நாடு அரசு சார்பில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்படுகிறது. இந்நிலையில், இம்மானுவேல் சேகரனாருக்கு திருவுருவச் சிலையுடன் கூடிய மணிமண்டபம் அமைக்கப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.

இது குறித்து தலைமைச் செயலகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், "தியாகி இம்மானுவேல் சேகரனார் அவர்களுக்கு திருவுருவச் சிலையுடன் கூடிய மணிமண்டபம் அமைக்கப்பட வேண்டும் என்பது அப்பகுதி மக்களின் நீண்ட நாள் கோரிக்கையாக இருந்தது. இந்நிலையில் தேவேந்திர குல வேளாளர் கல்வியாளர் குழு, தேவேந்திரர் பண்பாட்டுக் கழகம், திரு.இம்மானுவேல் சேகரனாரின் மகள் திருமதி.சூரிய சுந்தரி, பிரபா ராணி மற்றும் அவரது பேரன் திரு.சக்கரவர்த்தி ஆகியோர் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்களை நேரில் சந்தித்து இக்கோரிக்கையினை வலியுறுத்தினர்.

இதையும் படிங்க:“என் வாழ்க்கை கோலத்தை தொடங்கி வைத்தவர் இவர்தான்” - விஜய் சேதுபதி குறிப்பிட்ட பிரபலம் யார்?

தியாகி இம்மானுவேல் சேகரனார் அவர்கள் 1924-ஆம் ஆண்டு அக்டோபர் 9 அன்று பிறந்தார். இவரது சொந்த ஊர் முதுகுளத்தூர் வட்டம். செல்லூர் கிராமம் ஆகும். இவர் 1942-இல் ஆங்கிலேயர்களுக்கு எதிராக வெள்ளையனே வெளியேறு இயக்கத்தில் கலந்து கொண்டு சிறைவாசம் சென்றார். மேலும் ஒடுக்கப்பட்டோர் விடுதலைக்காகவும் போராடியவர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் பொதுமக்களின் நீண்ட நாள் கோரிக்கையினை நிறைவேற்றிடும் வகையில், தியாகி இம்மானுவேல் சேகரனர் அவர்களின் சமூக பங்களிப்பினைப் போற்றும் வகையில் அவரது பிறந்தநாள் நூற்றாண்டினையொட்டி அன்னார் நல்லடக்கம் செய்யப்பட்ட இராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடி நகராட்சிக்கு சொந்தமான இடத்தில் சுமார் 3 கோடி ரூபாய் மதிப்பீட்டில் திரு. இம்மானுவேல் சேகரனார் அவர்களுக்கு திருவுருவச் சிலையுடன் கூடிய மணிமண்டபம் தமிழ்நாடு அரசின் சார்பில் கட்டப்படும். இவ்வாறு மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் அறிவித்துள்ளார்" என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

இதையும் படிங்க:சாலையோரம் நின்ற வேன் மீது மினி லாரி மோதி கோர விபத்து - 7 பெண்கள் பலி!

ABOUT THE AUTHOR

...view details