கரோனா பரவலை கட்டுப்படுத்தும் நோக்கில் நாடு முழுவதும் மத்திய அரசு ஊரடங்கு உத்தரவு பிறப்பித்துள்ளது. இதன்காரணமாக, மளிகைக் கடை, காய்கறி கடைகள், மருந்தகங்கள் மட்டுமே இயங்க அனுமதி அளிக்கப்பட்டது.
ஊரடங்கு காரணமாக டாஸ்மாக் கடைகள் மூடியுள்ளதால், பெரிதும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளதாக கூறிவரும் குடி பிரியர்கள் சமூக வலைதளங்களில் உள்ள செய்முறை வீடியோக்களை பார்த்து வீட்டிலேயே சாராயம் காய்ச்ச தொடங்கினர். இவர்களை கண்டறிந்து நடவடிக்கை எடுப்பது காவல் துறையினருக்கு கூடுதல் சுமையாக அமைந்துள்ளது.
இந்நிலையில், ராமநாதபுரம் மாவட்டம் உச்சிப்புளி அருகே வீட்டில் கள்ளச் சாராயம் காய்ச்சி விற்று வருவதாக குற்றப்பிரிவு காவல்துறையினருக்கு இரகசிய தகவல் கிடைத்தது. அதன் அடிப்படைடியில் உச்சிப்புளி சேர்வைக்காரன் ஊரணி கிராமத்தைச் சேர்ந்த கருணாகரன் (37), என்பவரின் வீட்டில் சோதனை நடத்தியபோது, அவர் வீட்டில் குக்கரில் சாராயம் காய்ச்சியது தெரியவந்தது. இதனையடுத்து கருணாகரனை காவல் துறையினர் கைது செய்தனர்.