வறண்ட பூமி என்று கூறப்படும் ராமநாதபுரம் விவசாயத்திற்குப் பெயர் பெற்ற மாவட்டம் கிடையாது. மாவட்டத்தில் கடந்த மூன்று ஆண்டுகளுக்கும் மேலாக போதிய மழைப் பொழிவு, இல்லாததால் விவசாயிகள் மிகப்பெரிய இழப்புகளைச் சந்தித்து வந்தனர். கடந்தாண்டு நல்ல மழைப்பொழிவு இருந்தது. இதனால், மாவட்டம் முழுவதும் இருந்த கண்மாய், குளம், கிணறுகளில் நீர் நிரம்பின. மேலும் நிலத்தடி நீர்மட்டமும் உயர்ந்தது.
இதன்காரணமாக நெல், மிளகாய், பருத்தி, பயிறு வகைகளில் நல்ல விளைச்சல் இருந்தன. அதேபோல் எலுமிச்சை சாகுபடியும் நல்ல முறையில் நடைபெற்றது.
ராமநாதபுரம், பரமக்குடி, நயினார்கோவில், சத்திரக்குடி, கமுதி, கீழக்கரை உள்ளிட்ட பகுதிகளில் மொத்தம் 18 ஹெக்டர் பரப்பளவில் எலுமிச்சை விவசாயம் நடைபெற்று வருகிறது. இங்கிருந்து மதுரை, திண்டுக்கல், விருதுநகர் உள்ளிட்ட பகுதிகளுக்கு எலுமிச்சைப் பழங்கள் விற்பனைக்கு அனுப்பப்படுகின்றன.
சீசன் காலத்தில் ஒரு கிலோ எலுமிச்சைப் பழம் ரூ.25 முதல் ரூ.30க்கு விற்பனையாகும். தற்போது சீசன் இல்லாததால் வரத்து குறைந்து விலை தினமும் அதிகரித்து வருகிறது. இரு மாதங்களுக்கு முன்பு கிலோ ரூ.40க்கு விற்றது. தற்போது வரத்துக் குறைவு காரணமாக கிலோவுக்கு ரூ.20 அதிகரித்து, ரூ.60க்கு விற்பனை ஆகிறது. விலை அதிகரித்துள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.