இராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில் இன்று (ஏப். 01) மாவட்ட தேர்தல் அலுவலர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் தலைமையில், சட்டப்பேரவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவின் போது, வாக்குச்சாவடி மையங்களில் கண்காணிப்பு பணியில் ஈடுபடவுள்ள தேர்தல் நுண் பார்வையாளர்களுக்கான பயிற்சி நடைபெற்றது.
இதில் இராமநாதபுரம், முதுகுளத்தூர் பகுதிக்கு சொராப் பாபு, பரமக்குடிக்கு விசோப் கென்யே, திருவாடானைக்கு அனுரக் வர்மா ஆகியோர் முன்னிலை வகித்தனர். இப்பயிற்சியில் மாவட்ட தேர்தல் அலுவலர் தெரிவித்ததாவது, ‘தமிழ்நாடு சட்டபேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு ஏப்ரல் மாதம் 6ஆம் தேதி நடைபெறுகிறது.
ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள 4 தொகுதிகளில் மொத்தம் 1,647 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. அதில் 80 இடங்களில் அமைந்துள்ள 228 வாக்குச்சாவடிகள் பதற்றமானவை என கண்டறியப்பட்டுள்ளன.
இவ்வாக்குச்சாவடிகளில் பொதுமக்கள் சுதந்நிதராக வாக்களித்திட ஏதுவாக தேர்தல் நுண் பார்வையாளர்கள், கண்காணிப்பு, வெப் கேமரா கண்காணிப்பு, துணை ராணுவ வீரர்கள் பாதுகாப்பு உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகள் மூலம் கூடுதல் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்படுகிறது. குறிப்பாக, பொதுத்துறை வங்கி உள்ளிட்ட மத்திய அரசு நிறுவனங்களில் பணிபுரியும் 96 நபர்கள் நுண்பார்வையாளர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.