இந்திய-சீன படைகளுக்கு இடையே கடந்த 16ஆம் தேதி லடாக் பகுதியில் நடைபெற்ற சண்டையில் ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை அருகே உள்ள கடுக்கலூர் கிராமத்தைச் சேர்ந்த பழனி (40) வீரமரணம் அடைந்தார்.
இதையடுத்து அவரது உடல் லடாக் பள்ளத்தாக்கில் இருந்து டெல்லிக்கு ஹெலிகாப்டர் மூலம் கொண்டு வரப்பட்டு, அங்கிருந்து ராணுவ விமானம் மூலம் மதுரை விமான நிலையத்துக்கு நேற்று நள்ளிரவு 12 மணியளவில் கொண்டு வரப்பட்டது.
அங்கு மதுரை மாவட்ட ஆட்சியர் வினய், காவல்துறை உயர் அதிகாரிகள் அவரது உடலுக்கு மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார்கள்.
இதையடுத்து ஆம்புலன்ஸ் மூலமாக தொண்டி வரை எடுத்து வரப்பட்டு, அங்கிருந்து ராணுவ வாகனத்தில் முழு மரியாதையுடன் அதிகாலை 3 மணிக்கு அவரது சொந்த ஊருக்கு கொண்டு வரப்பட்டது.
ராணுவ வீரர் பழனியின் மனைவி வானதி தேவி அங்கு அவரது மனைவி வானதி தேவி, தந்தை காளிமுத்து, பழனியின் மகன்கள் உடலை பார்த்து கதறி அழுத காட்சி அனைவரையும் சோகத்தில் ஆழ்த்தியது.
இதைத்தொடர்ந்து ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் வீர ராகவ ராவ், மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் வருண்குமார் ஆகியோர் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார்கள்.
21 குண்டுகள் முழங்க ராணுவ வீரர் பழனி உடல் நல்லடக்கம் இதையடுத்து இன்று காலை ஏழு மணியளவில் பழனியின் வீட்டின் எதிர் புறம் உள்ள அவருக்கு சொந்தமான இடத்தில் முழு ராணுவ மரியாதையுடன் 21 குண்டுகள் முழங்க பழனியின் உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது. முன்னதாக, ராணுவம், கடற்படை, மாநில அரசு சார்பில் பழனியின் உடலுக்கு மலர் வளையங்கள் வைக்கப்பட்டு அஞ்சலி செலுத்தப்பட்டது.
அவரது சொந்த ஊர் கிராம மக்கள் மற்றும் உறவினர்கள் திரண்டு வந்து பழனிக்கு கண்ணீர் மல்க விடை கொடுத்தனர். இதில், அதிமுக மாவட்ட செயலாளர் முனியசாமி மற்றும் பரமக்குடி சட்டப்பேரவை உறுப்பினர் பிரபாகரன் ஆகியோரும் கலந்துகொண்டனர்.