ராமநாதபுரம் மாவட்டத்தில் நாடாளுமன்ற உறுப்பினர் நவாஸ் கனியின் புதிய அலுவலகம் திறக்கப்பட்டது. இதற்கு இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் தலைவர் காதர் மொய்தீன் தலைமை வகித்தார். மேலும் எம்எல்ஏ அபூபக்கர், முன்னாள் அமைச்சர் தங்கம்தென்னரசு உள்ளிட்டோர் இந்நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த காதர் மொய்தீன் கூறியதாவது, "பால் விலை உயர்வு சாமானிய மக்களின் வாழ்க்கையில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. அதற்கேற்றால் போல் வேலையை அரசு ஏற்படுத்தவில்லை என்று குற்றம் சாட்டினார்.
காஷ்மீரின் நிலை நாளை தமிழ்நாட்டிற்கும் ஏற்படலாம் அதையடுத்து காஷ்மீர் விவகாரத்தில் மத்திய அரசின் செயல் மாநில சுயாட்சியை மண்ணில் போட்டு மிதிப்பதாக உள்ளது. அதற்கு திமுக சார்பாக வெளியிட்ட அறிக்கையில், மத்திய அரசு நாடாளுமன்றத்தில் உள்ள தலைவர்கள் அடங்கிய குழுவை அமைத்து காஷ்மீரில் உள்ள தலைவர்களின் கருத்து, மக்களின் கருத்தை கேட்ட பின் சிறப்பு அந்தஸ்து நீக்கம் குறித்து முடிவு எடுக்க வேண்டும். மாநிலத்தில் சுயாட்சி மத்தியில் கூட்டாட்சி என்பதே இந்தியாவில் உள்ளது என்றார். தற்போது மத்திய அரசு அக்டோபர் 30ஆம் தேதி வரை இந்த சட்டம் அமலில் வராது என்று கூறியிருப்பது திமுகவின் அறிக்கைக்கு கிடைத்த வெற்றி என்று குறிப்பிட்டார்.
தொடர்ந்து பேசிய அவர், காஷ்மீரில் தற்போது சிறப்பு அந்தஸ்து நீக்கப்பட்டுள்ளது. இதேபோல் நாளை தமிழ்நாட்டுக்கோ அல்லது வேறு மாநிலத்துக்கோ இதே நிலை ஏற்படாது என்பதில் என்ன நிச்சயம்" என கேள்வி எழுப்பினார்.