ராமநாதபுரம்:மாவட்டத்தில் திமுக மகளிரணி செயலாளரும், தூத்துக்குடி மக்களவை உறுப்பினருமான கனிமொழி, இரண்டு நாள் தேர்தல் பரப்புரை மேற்கொண்டு வருகிறார்.
இன்று சாயல்குடி, முதுகுளத்தூர், கமுதி, பரமக்குடி பகுதியில் தனது தேர்தல் பரப்புரையை மேற்கொண்டார். அப்போது இடைவெளியில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.
அப்போது பேசிய அவர், “இலங்கை கடற்படையால் 3 மீனவர்கள் உயிரிழந்துள்ளனர். படகுகள் சேதம் அடைந்துள்ளன. அவர்கள் பெரும் துன்பங்களை அனுபவித்து வருகின்றனர். மத்திய அரசாங்கம் இதற்கு ஒர் முடிவு கட்ட வேண்டும்.
இறந்த மீனவர்களின் குடும்பத்தினருக்கும் நியாயமான இழப்பீடு வழங்கவேண்டும். திமுக ஆட்சிக்கு வரவேண்டும் என மக்கள் நினைக்கின்றனர். இங்கு கடல் நீரை குடிநீராக்கும் திட்டம், காவிரி கூட்டு குடிநீர் திட்டம் உள்ளிட்ட திட்டங்கள் செயல்படாமலுள்ளது. மாநிலம் முழுவதும் தண்ணீர் பிரச்னை உள்ளது” என்றார்.
தொடர்ந்து பேசிய அவர், பாஜகவில் எத்தனை தலைவர்கள் தமிழ்நாடு வந்தாலும், தாமரை இங்கே மலராது என்றும், சேது சமுத்திர திட்டம் எங்கள் கனவு திட்டம், திமுக ஆட்சிக்கு வந்தவுடன் விரைவில் செயல்படுத்தப்படும் எனக் கூறினார்.