ராமநாதபுரம் மாவட்டம் மோர்பண்ணையைச் சேர்ந்த வழக்கறிஞர் தீரன் திருமுருகன், உயர் நீதிமன்றம் மதுரைக் கிளையில் மனு ஒன்றை தாக்கல் செய்தார்.
அதில், தமிழர்களின் பாரம்பரிய வீர விளையாட்டாக ஜல்லிகட்டு உள்ளது. இது மஞ்சுவிரட்டு, ஏறுதழுவுதல் என்ற பல பெயர்களில் நடத்தப்படுகிறது. கலாச்சார அடையாளமாகவும் உள்ளது. மதுரை மாவட்டம் அலங்காநல்லூர், பாலமேடு, அவனியாபுரம் உள்ளிட்ட பல மாவட்டங்களில் நடைபெற்று வருகிறது. இதனைக் காண வெளிநாடுகளிலிருந்து ஏராளமானோர் வருவது வழக்கம்.
ஆனால், நேரடியாக வருவோருக்கு போதுமான இட வசதிகள் இல்லை. இதேபோல் முறையான கேலரி வசதியும் இல்லை. கூட்ட நெரிசலில் சிக்கித் திணறும் நிலை உள்ளது. இதனால், அவர்களால் முழுமையாக கண்டு ரசிக்கமுடியவில்லை. மரத்தின் மீதும், வீட்டின் மாடிகளில் நின்றும் ஜல்லிக்கட்டை காணும் நிலை உள்ளது.