இராமநாதபுரம் மாவட்டம் இராமேஸ்வரம் மீன்பிடித் துறைமுகத்திலிருந்து செப்-30ஆம் தேதி 800க்கும் மேற்பட்ட படகுகளில் மீன்பிடி அனுமதிச் சீட்டு பெற்று மீனவர்கள் மீன்பிடிக்கக் கடலுக்குச் சென்றனர்.
அதில் தங்கச்சிமடம் தனிகிளாஸ் என்பவருக்குச் சொந்தமான விசைப்படகில் ஏழு மீனவர்கள் மீன்பிடிக்கச் சென்றனர்.
அப்போது வலையைக் கடலில் வீசும்போது படகின் ஓரத்தில் நின்றுகொண்டிருந்த தங்கச்சிமடம் ராஜா நகரைச் சேர்ந்த அந்தோணி லிவார்தன் என்பவரின் மகன் கார்சன் என்பவர் படகிலிருந்து தவறி கீழே விழுந்துள்ளார்.
இதனையடுத்து, சக மீனவர்கள் கடலில் அருகிலிருந்த மீனவர்களுடன் இணைந்து தேடுதலில் ஈடுபட்டனர். இருப்பினும், அவர் கிடைக்காததால் மீனவர்கள் கரை திரும்பினர்.
இதுகுறித்து, சக மீனவர்கள் இராமேஸ்வரம் மீன்வளத்துறை உதவி இயக்குநர் அலுவலகத்தில் புகார் அளித்தனர். அதனைத் தொடர்ந்து கப்பல், ஹெலிகாப்டர், படகுகள் மூலம் தேடியும் உடலைக் கண்டுபிடிக்க முடியவில்லை.
இந்நிலையில், நான்கு நாள்களுக்குப் பிறகு நேற்று(அக்.4) இலங்கை யாழ்ப்பாணம் கடற்கரை பகுதியில், கார்சன் உடல் கரை ஒதுங்கி இருப்பதாக இலங்கை கடற்படை தகவல் அளித்தனர். அது கடலில் விழுந்து மாயமான கார்சனின் உடல் என்பது உறுதி செய்யப்பட்டது. மீன்வளத்துறையின் சார்பில் இலங்கை அரசுக்கு உடலை கொடுக்குமாறு பரிந்துரை அளிக்கப்பட்டுள்ளது. கடலுக்கு மீன்பிடிக்கச் சென்ற மீனவர் உயிரிழந்தது அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க:மாயமான மீனவரை மீட்க வலியுறுத்தி வேலைநிறுத்தப் போராட்டம் அறிவிப்பு