மனைவியை சரமாரியாக கட்டையால் தாக்கும் கணவன்! ராமநாதபுரம்:திருவாடானை அருகே கருமொழி கிராமத்தைச் சேர்ந்த பூமிநாதன் என்பவரின் மகள் சரண்யா என்பவருக்கும் ஆதியாகுடி கிராமத்தை சேர்ந்த பால்சாமி என்பவர் மகன் மகேந்திரன் என்பவருக்கும் கடந்த 2017ம் ஆண்டு சென்னை வடபழனி அழகிரி நகர் மாரியம்மன் கோயிலில் திருமணம் நடந்ததாக கூறப்படுகிறது.
இருவரும் ஏழு வருடங்களாக சேர்ந்து வாழ்ந்து வந்த நிலையில், சரண்யா ஏழு முறை கருவுற்றதாகவும், மகேந்திரன் ஒவ்வொரு முறையில் பாலில் கருக்கலைப்பு மாத்திரைகளை கொடுத்து கர்ப்பத்தை கலைத்ததாகவும் சரண்யா குற்றம் சாட்டியுள்ளார்.
இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன் மகேந்திரன் அவரது பெற்றோர் வீட்டிற்கு சென்ற போது, மகேந்திரன் வேறு ஒரு பெண்ணுடன் திருமணம் செய்ய ஏற்பாடு செய்ததாக கூறப்படுகிறது. இதனை அறிந்த சரண்யா தனது கணவனுக்கும் வேறு பொண்ணுக்கும் நடக்கவிருந்த திருமனத்தை தடுத்துள்ளார்.
இதனால் கோபம் அடைந்த மகேந்திரன், சரண்யாவுடன் தொடர்ந்து சேர்ந்து வாழாமல் தனது பெற்றோர் வீட்டிலயே இருந்து வந்ததாக சொல்லப்படுகிறது. மகேந்திரனை தொலைபேசி மூலம் சரண்யா தொடர்பு கொள்ள நினைத்தாலும் மகேந்திரன் சரண்யாவுடன் பேசுவதை தவிர்த்து வந்ததாக கூறப்படுகிறது.
இந்நிலையில், தொடர்ந்து சரண்யாவிற்கு கரு கலைப்பு மாத்திரைகள் கொடுக்கப் பட்டதால் தனது உடல்நிலை மோசமாக உள்ளதாகவும் தனது கணவரை தன்னுடன் சேர்த்து வைக்க கோரி மகேந்திரன் வீட்டிற்கு வந்துள்ளார். அப்போது மகேந்திரன் மற்றும் அவரது தாயாரும், சரண்யாவை தகாத வார்த்தைகளால் திட்டியும், கம்பி மற்றும் கட்டையால் சரமாரியாக தாக்கியுள்ளனர்.
மேலும், மகேந்திரனின் தயார் சரண்யாவின் கையில் கடித்தும், கழுத்தில் கீறியதாகவும் கூறப்படுகிறது. இருவரும் தாக்கியதில் கை மற்றும் தலையில் காயம் ஏற்பட்ட நிலையில் கணவரின் வீட்டு வாசலிலேயே அமர்ந்து கணவருடன் சேர்த்து வைக்க கோரி தர்ணாவில் ஈடுபட்டு வந்துள்ளார்.
இந்த சம்பவம் குறித்து போலீசாருக்கு தகவல் அளித்த நிலையில், விரைந்து வந்த போலீசார் விசாரணை மேற்கொண்டனர். பின், ரத்த காயங்களுடன் வீட்டின் முன் அமர்ந்து கொண்டிருந்த சரண்யாவை மருத்துவமனைக்கு அனுப்ப முயன்ற போது அதனை மறுத்த சரண்யா நீண்ட நேரத்திற்கு பின் 108 ஆம்புலன்ஸ் மூலம் திருவாடானை தாலுகா மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டார்.
இந்நிலையில், தனது கணவரை சேர்த்து வைக்குமாறு, வீட்டு வாசலிலேயே அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்ட பெண்ணிற்கு நியாயம் கிடைக்க வேண்டும் என்றும் அதே நேரத்தில் மகேந்திரன் மற்றும் அவரது தாயார் மீது போலீசார் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் வேண்டுகோள் வைத்துள்ளனர். இந்த நிலையில் சரண்யாவை மகேந்திரன் கட்டையால் தாக்கும் வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.
இதையும் படிங்க:“இது என்கவுண்டர் இல்லை..தற்காப்பு” - ரவுடி கொம்பன் ஜெகன் என்கவுண்டர் குறித்து திருச்சி எஸ்பி விளக்கம்!