மறைந்த முன்னாள் குடியரசுத் தலைவர் ஏ.பி.ஜெ அப்துல்கலாம் நினைவாக ராமேஸ்வரத்தில் இருந்து சாதனை முயற்சியாக இந்தியா முழுவதிலும் இருந்து அரசு மற்றும் தனியார் பள்ளி மாணவர்கள் தயாரித்த மிகச்சிறிய அளவிலான 100 செயற்கைக்கோள்கள், ஒரே நேரத்தில் வரும் 7ஆம் தேதி ராமேஸ்வரத்திலிருந்து ராட்சத ஹிலியம் பலூன் மூலமாக வானத்தில் செலுத்தப்படவுள்ளன.
ராமேஸ்வரத்தில் உள்ள அப்துல்கலாம் சர்வதேச அறக்கட்டளை, ஸ்பேஸ் சோன் இந்தியா மற்றும் மார்டின் குரூப்ஸ் ஆகியோர் இணைந்து இந்திய பள்ளி மாணவர்கள் தயாரித்துள்ள மிகச்சிறிய செயற்கைக்கோள்களை வானத்தில் ஒரே நேரத்தில் செலுத்தப்படவுள்ளது.
இதன் மூலம் கின்னஸ் உலக சாதனை, வேர்ல்டு ரெக்கார்டு, ஏசியா புக் ஆப் ரெக் கார்டு, இந்தியா புக் ஆப் ரெக்கார்டு, அசிஸ்ட் புக் ஆப் ரெக்கார்டு என 5 சாதனைகள் செய்யும் முயற்சியாக இந்த நிகழ்வு நடத்தப்படவுள்ளது. இதற்கான பணிகள் கடந்த ஆண்டிலேயே தெடங்கி நடைபெற்று வருகிறது.
இதுகுறித்து அப்துல் கலாம் பேரன் ஷேக்சலீம் கூறியதாவது, அப்துல் கலாம் அறக்கட்டளை வழியாக மாணவர்களுக்கு செயற்கைக்கோள் தொழில்நுட்பம் குறித்து பயிற்றுவித்தல் மற்றும் விழிப்புணர்வு ஏற்படுத்தும் திட்டத்தை தொடங்கினோம்.
இதற்காக இந்தியா முழுவதிலும் இருந்து 9ஆம் வகுப்பு முதல் பிளஸ்2 வரை பயிலும் சுமார் ஆயிரம் மாணவர்களைத் தேர்ந்தெடுத்தோம். அந்த மாணவர்களை தலா 10 பேர் கொண்ட குழுவாக பிரித்து, 100 குழுவினருக்கு ஆன்லைன் மூலம் கையடக்க பெம்டோ செயற்கைக்கோள்களின் வடிவமைப்பு மற்றும் அதன் மேம்பாட்டுக்கான அறிவுத்திறன்களைப் பயன்படுத்துவது குறித்து பயிற்சி வழங்கினோம்.