மன்னார் வளைகுடா கடல் பகுதியில் நிலைகொண்டிருந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி தற்போது காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக தொடர்ந்து அதே இடத்தில் நிலைகொண்டுள்ளது.
இதன் காரணமாக இன்றும், நாளையும் ராமநாதபுரம், தூத்துக்குடி, சிவகங்கை, விருதுநகர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன்கூடிய கனமழையும், ஏனைய மாவட்டங்களில் அநேக இடங்களில் லேசான முதல் மிதமான இடி மின்னலுடன் கூடிய மழையும் பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இந்நிலையில், ராமநாதபுரம் மாவட்டத்தில் இருக்கும் ராமேஸ்வரம், பாம்பன், தங்கச்சிமடம் பகுதிகளில் கடல் சீற்றத்துடன் காணப்படுகிறது. ராமநாதபுரம் மாவட்டத்தின் நகர்ப் பகுதியில் இன்று (டிச. 06) ஒரு மணி நேரத்திற்கு மேலாக கனமழை பெய்துவருகிறது.
மாவட்ட ஆட்சியர் அலுவலகம், பேருந்து நிலையம், பாரதிநகர், கடை தெரு வீதி, பட்டினம்காத்தான் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்துவருகிறது. தாழ்வான பகுதிகளில் நீர் தேங்கியுள்ளது.
ஒரு மணி நேரத்திற்கும் மேலாக வலுக்கும் கனமழை இதேபோல் ராமேஸ்வரம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் லேசான சாரல் மழை பெய்துவருகிறது. இதனால் மாவட்டம் முழுவதும் குளிர்ச்சியான சூழல் நிலவிவருகிறது. வலுவிழந்த காற்றழுத்த தாழ்வு அதே இடத்தில் நீடிப்பதால் மேலும் மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.