ராமநாதபுரம்: பரமக்குடியில் நடைபெற்ற கட்சி நிர்வாகியின் திருமண வரவேற்பு நிகழ்ச்சியில், பாஜக மூத்த தலைவர் ஹெச்.ராஜா கலந்து கொண்டார். இதனைத்தொடர்ந்து செய்தியாளர்களை அவர் சந்தித்தார்.
அப்போது அவர் பேசுகையில், “மணிப்பூர் மாநில ஆளுநராக நியமிக்கப்பட்டிருக்கும் இல.கணேசனுக்கு என்னுடைய வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன். 1975ஆம் ஆண்டு அவரும், நானும் ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தில் பணிபுரிந்துள்ளோம்.
அகவிலைப்படி கொடுக்காத திமுக அரசு
ஏற்கனவே இல.கணேசனுக்கு தொலைபேசி மூலம் வாழ்த்துக்களை தெரிவித்து விட்டேன். 100 நாள் ஆட்சியில், ரூ. 40 ஆயிரம் கோடி கடன் வாங்கிய அரசாக திமுக அரசு திகழ்ந்து வருகிறது.
இன்னும் ஆறு மாதங்களில் ரூ. 92 ஆயிரம் கோடி கடன் வாங்கப் போவதாக இடைக்கால பட்ஜெட்டில் தெரிவித்துள்ளது. கடன் வாங்கியதாக முந்தைய அரசை குற்றம் சொன்ன திமுகவும், இப்போது அதே வழியைத்தான் கடைபிடிக்கின்றனர்.