2017ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 26ஆம் தேதி நடைபெற்ற குரூப்-2ஏ தேர்வில் முறைகேடு நடந்ததாக எழுந்த புகார் தொடர்பாக தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது. இந்த குரூப் 2 தேர்வில், ராமேஸ்வரம் தேர்வு மையத்தில் தேர்வு எழுதியவர்களில் பலரும் தரவரிசையில் முன்னிலை பெற்றதாக குற்றச்சாட்டு எழுந்தது.
குரூப் 2 தேர்வு மோசடி விவகாரம்: பெண் ஊழியர் பணியிடை நீக்கம் - பெண் ஊழியர் பணியிடை நீக்கம்
ராமநாதபுரம்: குரூப்-2ஏ தேர்வில் முறைகேடு செய்து தேர்ச்சி பெற்றதாக எழுந்த புகாரையடுத்து, ராமநாதபுரம் பத்திரப்பதிவு அலுவலகத்தில் உதவியாளராக இருந்த பெண் ஊழியர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
இந்த தேர்வில் முன்னிலை பெற்றவர்களின் பட்டியலின் அடிப்படையில், தேர்ச்சி பெற்ற விதம் குறித்தும் மோசடி நபர்களுடன் உள்ள தொடர்பு குறித்தும் காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டனர். அதன்படி, ராமநாதபுரம் பட்டினம்காத்தான் சுப்பையா நகரைச் சேர்ந்த மாலாதேவி என்பவர், அந்த தேர்வில் மாநில அளவில் 37ஆவது தரவரிசை பெற்று ராமநாதபுரம் பத்திரப்பதிவு அலுவலகத்தில் உதவியாளராக நேரடி நியமனம் செய்யப்பட்டிருந்தார்.
இந்நிலையில், கடந்த பிப்ரவரி மாதம் மாலாதேவியிடம் பல்வேறு கட்ட விசாரணை மேற்கொள்ளப்பட்டது. இதன் தொடர்ச்சியாக, பெண் ஊழியர் மாலாதேவி தற்போது பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார். இதற்கான உத்தரவு பத்திரப்பதிவு தலைமை அலுவலகத்தின் சார்பில் அனுப்பப்பட்டுள்ளதாக பத்திரப்பதிவு அலுவலக வட்டாரங்கள் தகவல் தெரிவித்தன.