தமிழ்நாடு

tamil nadu

By

Published : Mar 8, 2020, 5:54 PM IST

ETV Bharat / state

கடலையும் உடலையும் நம்பி பல ஆண்டுகளாக கடல் பாசி எடுத்துவரும் சின்னப்பாலம் பாட்டிகள்!

ராமநாதபுரம்: ராமேஸ்வரம் பகுதியில் பல ஆண்டுகளாக உடலையும் கடலையும் நம்பி கடல் பாசி எடுத்து அசத்திவரும் பாட்டிகளின் உழைப்பு அனைவருக்கும் பெரும் ஊக்கமாக அமைந்துள்ளது.

சின்னப்பாலம் பாட்டிக்கள்
சின்னப்பாலம் பாட்டிக்கள்

ராமேஸ்வரம் என்றவுடன் அனைவருக்கும் நினைவிற்கு வருவது கடலும் கடல் சார்ந்த பகுதியும் (நெய்தல்) தான். இப்பகுதிகளில் மீன்பிடித் தொழிலே பிராதானம். அதையும் தாண்டி 40 ஆண்டுகளுக்கு மேலாகக் கடலில் சென்று பாசிகளைச் சேகரிக்கும் பணியில் ஈடுபட்டுவரும் அசத்தல் பாட்டிகளை குறித்தும் தெரிந்து கொள்வோம்.

ராமேஸ்வரம் அருகேயுள்ள சின்னப்பாலம் பகுதியைச் சேர்ந்த நம்பு என்கிற பாட்டி தனது 8ஆவது வயதிலிருந்து கடலில் பாசி சேகரிக்கும் தொழிலில் ஈடுபட்டுவருகிறார். இந்த பாட்டி, சக நட்புகளுடன் சேர்ந்து கடலில் பாசி எடுக்கத் தயாராகி காலை 7 மணிக்குக் கடலுக்குள் செல்கிறார். மூன்று அல்லது நான்கு மணி நேரம் கடலில் பாசிகளை எடுத்து, இடுப்பில் கட்டியுள்ள சாக்குப் பையில் சேகரிக்கிறார். பைகள் நிறைந்தவுடன் மிதவையில் கட்டிவிட்டு மற்றொரு பையில் சேகரிக்கத் தொடங்குகிறார்.

கடல் பாசி எடுத்துவரும் சின்னப்பாலம் பாட்டிக்கள்

அதன்பின் வெளியே வரும்போது இரண்டு சாக்குப் பைகள் நிறைய கடல் பாசிகளை எடுத்து வந்து கடற்கரையில் கொட்டி உலர வைப்பார். இது பற்றி நம்பு பாட்டியிடம் கேட்ட போது, “நான் 8 வயதிலிருந்து கடல் பாசி எடுத்து வருகிறேன். எனக்கு இப்போது வயது 60ஐ தாண்டியுள்ளது. கிட்டத்தட்ட 52 வருடங்களுக்கு மேலாக இந்தக் கடல் பாசி எடுக்கும் வேலையைச் செய்து வருகிறேன். நான் கடலுக்குள் சென்றால் 8 கிலோ முதல் 12 கிலோ அளவிலான கடல் பாசிகளை எடுத்து வருவேன். இளம் பெண்கள் பாசி எடுக்கச் சென்றால் 15 கிலோ வரை எடுத்து வர முடியும்” என்றார்.

மேலும், எடுத்து வரும் பாசிகளை கடற்கரையில் நன்கு உலர வைத்து விற்றால் கிலோ 50 ரூபாய் வரை போகும் என்று கூறும் அவர், காலை 7 மணிக்கு வந்தால் மாலை 4 மணிக்குத் தான் தாங்கள் அனைவரும் வேலையை முடிப்போம் என்றார். ஒரு நாளைக்கு 500 ரூபாய் முதல் 600 ரூபாய் வரை இதன் முதல் கிடைப்பதாகவும் நம்பு பாட்டி கூறுகிறார்.

பாசி எடுக்கும்பாட்டி

இது குறித்து 7ஆவது வயதிலிருந்து பாசி எடுக்கும் மாரி பாட்டியிடம் கேட்டோம். அவர், “நான் காலை 6 மணிக்குக் கிளம்பி கடலுக்குள் செல்வேன். வெயிலின் தாக்கம் அதிகரித்த பின் இரண்டு அல்லது மூன்று மூட்டை கடல் பாசிகளுடன் கரை திரும்புவோம். யாரையும் நம்பியிருக்கக் கூடாது என்ற எண்ணத்தில் கடல் பாசி எடுத்து வருகிறேன். நான் மட்டுமல்ல; இங்கு வரும் அனைவரும் தன்னம்பிக்கையை முன் நிறுத்தியே இந்தப் பாசி எடுக்கும் வேலையை 40 ஆண்டுகளுக்கு மேலாக செய்து வருகிறார்கள்” என்றார். கடற்கரை வந்து செல்ல ஆட்டோவிற்கு 60 ரூபாய் செலவாகும்” என்றார்.

சின்னப்பாலம் பாட்டிக்கள் பேட்டி

தொடர்ந்து பேசிய மாரி, 300 ரூபாய் முதல் 400 ரூபாய் வரை தங்களுக்குக் கிடைக்கும் எனவும், 6 மாதம் தென் கடல் 6 மாதம் வட கடல் என பாசி எடுப்போம் என்றும் கூறினார். நம்மிடம் பேசிக்கொண்டிருக்கும்போதே, மீண்டும் கடற்கரையில் பாசிகளை உலர வைக்கச் சென்றார் அவர். தற்போது நவீன யுகத்தில் சிறு பிரச்னை வந்தவுடன் சோர்ந்து விடும் மக்கள் மத்தியில் உடல் தளர்ந்தாலும், தன்னம்பிக்கை தளராமல் வேலை செய்யும் இவர்கள் அனைவரையும் மெச்சினாலும் தகும்!

ABOUT THE AUTHOR

...view details