ராமநாதபுரம்: பரமக்குடியில் காங்கிரஸ் நிர்வாகி இல்லத் திருமண விழாவில் முன்னாள் ஒன்றிய நிதியமைச்சர் ப. சிதம்பரம் கலந்துகொண்டார்.
நிகழ்ச்சி முடிந்த பிறகு செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது அவர் கூறுகையில், “ஆப்கானிஸ்தானுக்கு இந்தியாவில் இருந்து பெரிய அளவில் ஏற்றுமதி இறக்குமதி கிடையாது. அது ஒன்றும் பெரிய கவலை இல்லை.
அனைத்திற்கும் உரிமை
ஆப்கன் நாட்டில் இருக்கக்கூடிய இந்திய மக்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும். அவர்கள் இந்தியாவுக்குள் வர விரும்பினால் வழிவகை செய்ய வேண்டும்.
ஆப்கன் மக்கள் ஒளிமயமான எதிர்காலத்தை நோக்கி இருக்க வேண்டும். மனித உரிமைகள், பெண்களுக்கான உரிமை, கல்வி உரிமை, பேச்சுரிமை இவையெல்லாம் இருக்க வேண்டும் என்று விரும்பக்கூடிய நாடு நம் இந்தியா.
ஆனால் ஆப்கன் நாடு எந்த பாதையில் போகப் போகிறது என்று தெரியவில்லை. ஆனால் பயணம் என்பது சுதந்திரம், பேச்சு, எழுத்து, கல்வி, பெண்ணுரிமை என்ற நோக்கத்தில் நடைபோட வேண்டும்.
திமுகவை பாராட்டிய முன்னாள் நிதியமைச்சர் ப சிதம்பரம்... புலனாய்வுத் துறையில் சேர்ந்திருக்கலாம்
10 ஆண்டுகள் அரசு இயந்திரத்தை தவறாக பயன்படுத்தியவர்கள் இரண்டு மாதத்தில் அரசு இயந்திரம் தவறாக பயன்படுத்தப்படுகிறது என்று கண்டுபிடித்துவிட்டார்கள். இவர்களை ஒருவேளை புலனாய்வுத் துறையில் வேண்டும் என்றால் சேர்த்துக்கொள்ளலாம்.
ஆட்சி வந்து மூன்று மாதம்தான் ஆகியுள்ளது. 100 நாளில் நிதிநிலை அறிக்கையை அறிவித்து உள்ளார்கள். தேர்தலில் தந்த வாக்குறுதிகளை படிப்படியாக நிறைவேற்றுவதாக கூறி முதலில் ஐந்து வாக்குறுதிகள், இந்த நிதிநிலை அறிக்கையில் மூன்று, நான்கு நிறைவேற்றி உள்ளார்கள்.
கல்வி, மருத்துவம், சுகாதார துறைக்கு நிறைய ஒதுக்கீடுகள் தந்துள்ளார்கள். கல்வி குறைபாடு கல்வி கற்பதில் இடைவெளி ஏற்பட்டுள்ளது. அதனை பூர்த்தி செய்துள்ளார். ஊரகப் பகுதிகளில் வாழக்கூடிய ஏழை, நடுத்தர மக்கள் கம்ப்யூட்டர் வழியாக கல்வி கற்க முடியாதவர்களுக்கு 200 கோடியை அறிவித்துள்ளார்கள். இது வரவேற்கத்தக்கது.
அதிமுக வாங்கிய கடன்
ஒரு அரசின் செயல்பாட்டை தீர்மானிக்க ஒன்று அல்லது இரண்டு ஆண்டுகள் தேவை. கடன் வாங்குவது என்பதை குற்றம் சொல்ல முடியாது. கடனை வாங்கி எதற்கு பயன்படுத்துகிறார்கள் என்பது முக்கியம். கடன் வாங்கி முதலீடு செய்தல், கடன் வாங்கி கட்டுமானத் துறையில் முதலீடு, அடிப்படை வசதிகளில் முதலீடு செய்யலாம்.
கடன் வாங்குதல் தப்பு கிடையாது. அந்தக் கடனை கட்ட கூடிய சக்தி இருந்தால் வாங்கலாம். ஆனால் அதிமுக அரசில் வாங்கிய கடனை எதற்கு செலவழித்தார்கள் என்று புரியவில்லை.
நீங்களும் நானும் வேண்டுமென்றால் பேசிக்கொள்ளலாம். அரசுக்கு மஞ்சள் கடிதம் கிடையாது. கடனுக்கு வட்டி கட்ட முடியும் என்றால் கடன் இருப்பதில் தப்பு கிடையாது. இது பத்திரிகை பேட்டிகளில் விவாதிக்கும் பொருளல்ல” என்றார்.
இதையும் படிங்க: உள்நாட்டில் பாதுகாப்பு தொழிற்நுட்பம்- வெங்கையா நாயுடு