ராமநாதபுரம் மாவட்டம் பனைகுளம் அருகே மீனவர்கள் கடலுக்குள் சென்று மீன் பிடித்து கரை திரும்பும்போது மீன் வலையில் சித்தாமை ஒன்று சிக்கியது.
இது குறித்து மீனவர்கள் வனத்துறையினருக்கு தகவல் அளித்தனர். அதனைத் தொடர்ந்து அங்கு சென்ற வேட்டைத் தடுப்பு காவலர்கள் 35 கிலோ எடை கொண்ட சித்தாமையை வலையில் இருந்து எடுத்து பாதுகாப்பாக கடலில் விட்டனர்.
சித்தாமை வலையில் சிக்கியது குறித்து ராமநாதபுரம் வனச்சரகர் சதீஷ் கூறுகையில், "டிசம்பர் மாதம் முதல் மன்னார் வளைகுடா கடல் பகுதியில் கடல் ஆமைகள் கரைக்கு வந்து முட்டையிடுவது வழக்கம்.
தற்போது ஆமைகள் இனச்சேர்க்கை செய்யும் காலம், அதனால் அவை கரையிலிருந்து ஒரு கிலோ மீட்டர் பகுதியில் இருக்கும். அப்போது மீனவர்கள் வலையில் சிக்கிக் கொள்ளும் வாய்ப்பும் அதிகம். இதுகுறித்து மீனவர்களுக்கு வனத்துறையினர் சார்பாக அறிவுரை வழங்கப்பட்டுள்ளது" என்றார்.