ராமநாதபுரம்: ராமேஸ்வரம் அருகே உள்ள மீனவ கிராமத்தைச்சேர்ந்தவர், கவி (45 - பெயர் மாற்றப்பட்டது). இவர் கடந்த 2 நாட்களுக்கு முன்பு, கடல் பாசி சேகரிப்பதற்காகச் சென்றுள்ளார். அப்போது, அங்குள்ள இறால் பண்ணையில் வேலை பார்க்கும் ஒடிசா மாநிலத்தைச்சேர்ந்த ஆறு வடமாநிலத்தவர்கள் கவியை கேலி செய்ததாக கூறப்படுகிறது.
இந்நிலையில், நேற்று (மே 24) காலை வழக்கம் போல், கடல் பாசி சேகரிக்க சென்ற போது, கவியை இறால் பண்ணை அருகே அடர்ந்த காட்டுப் பகுதியில் அடையாளம் தெரியாத நபர்கள் கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்து படுகொலை செய்தனர். மேலும், அவருடைய உடலை மறைக்கும் நோக்கத்தோடு தீ வைத்து எரித்துள்ளனர்.
கடல் பாசி சேகரிக்க சென்ற கவி, நீண்ட நேரமாகியும் வீடு திரும்பாததால் சந்தேகம் அடைந்த அவரது உறவினர்கள் மற்றும் மீனவ கிராம மக்கள் கடலோரப் பகுதியில் தேடியுள்ளனர். பின்னர், ராமேஸ்வரம் நகர் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. இதையடுத்து காவல்துறையினர் கவியைத் தேடியுள்ளனர். அப்போது, காட்டுப் பகுதியில் பாதி எரிந்த நிலையில் கிடந்த கவியின் உடலை கண்டுபிடித்தனர்.