மத்திய அரசு புதிதாகக் கொண்டுவந்துள்ள 'தேசிய கடல் மீன்வள சட்ட மசோதா- 2019' குறித்த கருத்து கேட்புக் கூட்டம் ராமநாதபுரம் ஒருங்கிணைந்த மீன்வளத் துறை அலுவலகத்தில் நேற்று மாலை நடைபெற்றது.
மீன்வளத் துறை துணை இயக்குநர் காத்தவராயன் தலைமையில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில் மீனவர் சங்க நிர்வாகிகள் சேசு, அருள், எம். கருணாமூர்த்தி, ஆனந்த் உள்ளிட்ட மீனவ சங்கப் பிரதிநிதிகள், பாரம்பரிய மற்றும் விசைப்படகு மீனவர்கள் கலந்துகொண்டனர் .
'மத்திய அரசு கொண்டுவந்துள்ள இந்த வரைவு சட்டத்தின்படி 12 கடல் மைல் தூரத்திற்குள் மீன்பிடிக்கச் செல்லும் மீனவர்கள் மத்திய அரசின் அனுமதி பெற வேண்டும் என்பது போன்ற பல கட்டுப்பாடுகள் இருப்பதால், இந்தப் புதிய சட்டம் மீனவர்களின் வாழ்வாதாரத்தைப் பாதிக்கும், பாரம்பரிய மீன்பிடித்தொழில் அழிந்துபோகும்' எனத் தெரிவித்து கூட்டத்தில் எழுந்து கூச்சலிட்டனர்.
வெளிநடப்பு செய்த மீனவர்கள் மேலும், இந்தச் சட்டத்தை மீனவர்கள் ஏற்கத் தயாராக இல்லை எனவும், தமிழ்நாட்டில் ஏற்கனவே செயல்பாட்டில் உள்ள மீன்பிடிச் சட்டத்தையே தொடர்ந்து அமல்படுத்த வேண்டும் எனவும் மீனவர்கள் வலியுறுத்தினர்.
இதையடுத்து, இக்கூட்டம் குறித்து முறையான அறிவிப்பு செய்யாமல், திடீரென கூட்டத்தைக் கூட்டியிருப்பதாக அதிருப்தி தெரிவித்த மீனவர்கள் அங்கிருந்து வெளிநடப்புச் செய்து, மீன்வளத் துறை அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.