இக்கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர் வீர ராகவ ராவ் கூறியதாவது, 'பொது ஊரடங்கில் பல்வேறு அத்தியாவசியப் பணிகளுக்கு விலக்களித்து அரசு அனுமதி வழங்கியுள்ளது. அதன்படி, ராமநாதபுரம் மாவட்டத்தில் மீனவர்களின் வாழ்வாதாரத்தைக் கருத்தில் கொண்டு, விசைப்படகுகளுக்கான மீன்பிடித் தடைக்காலம் 61 நாட்களிலிருந்து 47 நாட்களாக குறைக்கப்பட்டு, மீனவர்கள் ஜுன் 1ஆம் தேதி முதல் மீன்பிடிக்கச் செல்லலாம் என அரசு உத்தரவிட்டுள்ளது.
இந்நிலையில் மீன்உற்பத்தி, படகு பராமரிப்பு போன்ற பல்வேறு காரணங்களால் ஜுன் 15ஆம் தேதி முதல் விசைப்படகு மீனவர்கள் மீன்பிடிக்கச் செல்வதாகப் பல்வேறு மீனவர் கூட்டுறவு சங்கப் பிரதிநிதிகள் தெரிவித்துள்ளனர். அதுபோல, மீன் உற்பத்தி தரத்தினை மேம்படுத்திட 24 மணி நேரமும் மீன்பிடிப்பைத் தவிர்த்து, தற்காலிகமாக 12 மணிநேர மீன்பிடிப்பு முறையை அரசு நடைமுறைப்படுத்தப்படுகிறது.
எனவே, இதனை மீனவர்கள் முறையாகப் பின்பற்றிட வேண்டும். மேலும், ராமநாதபுரம் மாவட்ட மீனவர்களின் மீன்பிடியில் கிடைக்கும் மீன்களை, கடல் உணவு ஏற்றுமதி நிறுவனங்கள் உரிய விலையில் கொள்முதல் செய்திட வேண்டுமென சம்பந்தப்பட்ட நிறுவனங்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.