ராமநாதபுரம் மாவட்டம், ராமேஸ்வரத்தில் இருந்து கடந்த ஜனவரி மாதம் 27ஆம் தேதி ராமேஸ்வரம் மீன் பிடித் துறைமுகத்திலிருந்து விசைப்படகில் கடலுக்குச் சென்ற சுவிட்டர், ரூம்ஸ், ராஜி, முத்து, இளையராஜா, செல்வம், விஸ்வா, வசீகரன், நாகரத்தினம், டேவிட், நாகேஸ்வரன் ஆகிய 11 மீனவர்கள் நெடுந்தீவு அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்தனர்.
அப்போது அந்தப் பகுதியில் ரோந்துப் பணியில், ஈடுபட்டுக் கொண்டிருந்த இலங்கை கடற்படையினர் தமிழ்நாடு மீனவர்கள் எல்லைத் தாண்டி மீன்பிடித்ததாகக் கூறி, 11 மீனவர்கள் மீதும் புதிய சட்டத்தின் கீழும் வழக்குப்பதிவு செய்து யாழ்ப்பாணம் சிறையில் அடைத்தனர்.
இன்று இலங்கை ஊர்க்காவல்துறை நீதிமன்றத்தில் நீதிபதி அந்தோணிப்பிள்ளை, ஜூட்சன் முன்னிலையில் வழக்கு விசாரணைக்கு வந்தது. இதில் மீண்டும் இலங்கை எல்லைக்குள் மீன் பிடித்தால் இரண்டு ஆண்டுகள் சிறைத் தண்டனையை அனுபவிக்கவேண்டும் என்ற நிபந்தனையின் அடிப்படையில், 11 மீனவர்களை விடுதலை செய்து உத்தரவிட்டார்.