ராமநாதபுரம் மாவட்டம் ஆர்.எஸ்.மங்கலம் தாலுகாவிற்குட்பட்ட உப்பூரில் சூப்பர் கிரிட்டிக்கல் தொழில்நுட்பத்தில் 800 மெகாவாட் திறன் கொண்ட இரண்டு அனல் மின் நிலையங்கள் அமைக்கும் பணி கடந்த 2016ஆம் ஆண்டு தொடங்கி நடைபெற்றுவருகிறது. தற்போது அனல் மின் நிலையங்களுக்கு கடல் நீர் எடுத்துவந்து பின் கழிவுகளை கடலுக்குள் கொட்ட, அனல் மின் நிலையத்திலிருந்து 7.8 கி.மீ. தொலைவுக்கு மண்ணைக் கொட்டி பாலம் அமைக்கும் பணி நடைபெற்றுவருகிறது. தற்போது 1.5 கி.மீ வரையிலான பாலம் கட்டும் பணிகள் நிறைவடைந்துள்ளன.
இந்த பாலம் கட்டுமானப் பணி தங்களது வாழ்வாதாரத்தை பெரிதும் பாதிப்பதாகவும், உடனடியாக இதனை நிறுத்த வேண்டும் என வலியுறுத்தி அப்பகுதியினர் சுதந்திர தினத்தன்று மோர் பண்ணை கிராமத்தில் நடைபெற்ற கிராம சபைக் கூட்டத்தில் கருப்பு கொடி காட்டி போராட்டம் நடத்தியிருந்தனர். பின்பு மாவட்ட ஆட்சியர் பேச்சுவார்த்தை நடத்தியதை அடுத்து, தற்காலிகமாக உப்பூர் அனல் மின் நிலையத்திற்கான பால பணியை நிறுத்தி வைக்க உத்தரவிட்டிருந்தார்.
இந்த நிலையில் தற்போது எந்தவித முன்னறிவிப்புமின்றி இரண்டு நாட்களுக்கு முன்பு மீண்டும் உப்பூரில் பாலப்பணிகள் தொடங்கப்பட்டுள்ளன. இதையடுத்து இன்று ராமநாதபுரம் கிழக்கு கடற்கரை கிராம கூட்டமைப்பு சார்பாக 25 கிராம மீனவர்கள் அடையாள வேலை நிறுத்தம் செய்து 100க்கும் மேற்பட்ட படகுகளில் பாலப்பணி நடைபெறும் இடத்திற்கு சென்று கருப்புக்கொடி காட்டியபடி போராட்டத்தில் ஈடுபட்டனர்.