ராமநாதபுரம் மாவட்டத்தில் மிகப்பெரிய வருவாயாக இருந்து வருவது மீன்பிடியும், அதன் சார்ந்த தொழில்களும்தான். இங்கிருந்து ஆண்டுக்கு சுமார் 1 மெட்ரிக் டன் மீன் ஏற்றுமதி செய்து வருகிறது. கடந்த ஏப்ரல் 15ஆம் தேதி மீன்பிடி தடை காலம் துவங்கியது. இதனால் மீனவர்கள் படகுகள் அனைத்தையும் கரையில் நிறுத்தி வைக்கப்பட்டு பழுது பழுது நீக்கும் பணியை மேற்கொண்டு வருகின்றனர்.
தங்களது படகுகளில் பழுதாகி உள்ள இன்ஜின்கள், வர்ணம், பலகைகள் மாற்றுதல், உள்கட்டமைப்பு உள்ளிட்ட பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். தமிழகத்தில் மொத்தம் உள்ள 5,000 விசைப்படகுகளில் ராமேஸ்வரத்தில் மட்டும் 700 படகுகள் உள்ளன. ராமநாதபுரம் மாவட்டத்தில் ராமேஸ்வரம், பாம்பன் மண்டபம் பகுதியில் 1500 மேற்பட்ட விசைப்படகுகள் உள்ளன. இன்னும் ஒரு வாரமே உள்ள நிலையில் படகுகளை சீரமைக்கும் பணியில் படகு உரிமையாளர்கள் வேகம் காட்டி வருகின்றனர்.
இது குறித்து மீனவர்கள் கூறுகையில், "பாதிக்கும் மேற்பட்ட படகுகள் பழுது சரி செய்து கடலில் நிறுத்தி வைக்கப்பட்டிருக்கின்றன. மீதி படகுகள் ஜூன் 15ஆம் தேதிக்குள் தயாராகிவிடும். மீன்பிடி தடைக்கால நிவாரண தொகை தற்போது வரை தங்களுக்குக் கிடைக்கவில்லை. அது எப்போதுமே கடலுக்கு திரும்பிச் சென்ற பிறகே தொகை வந்து சேர்கிறது" என்று குற்றச்சாட்டினர்.
நிறைவுக்கு வரும் மீன்பிடி தடைக்காலம்; கடலுக்கு செல்ல தயாராகும் மீனவர்கள்! இது குறித்து மீன்வளத்துறை கூடுதல் இயக்குனர் டாம் வர்கீஸ் கூறுகையில், "இந்தாண்டு முதல் நிவாரண கால தொகை நேரடியாக வங்கிக் கணக்கில் செலுத்தும் முறை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. மாவட்டம் முழுவதும் 33 இ-சேவை மையங்கள் திறக்கப்பட்டு அதில் மீனவர்களின் ஆவணங்கள் பெறப்பட்டு வருகிறது. ராமநாதபுரம் மாவட்டம் முழுவதும் 35 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் இந்த நிவாரணத் தொகை பெற்றுள்ளனர். தேர்தல் நடத்தை விதி அமலில் இருந்ததால், தாமதம் ஏற்பட்டது. மீனவர்களின் ஆவணங்கள் பதிவேற்றும் பணி நடைபெற்று வருகிறது. முடிவடைந்தவுடன் நேரடியாக வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்படும்" என்றார்.