தமிழ்நாட்டில் வறட்சி மாவட்டங்களில் ஒன்றான ராமநாதபுரம் மாவட்டம் வானம் பார்த்த பூமியாகவே உள்ளது. மாவட்டத்தில், சுமார் ஒரு லட்சத்து 75 ஹெக்டேர் பரப்பளவில் விவசாயம் நடைபெறுகிறது. மழைக் காலத்திற்கு முன்பே விவசாய நிலத்தை விவசாயிகள் தயார் செய்து மழைக் காலத்தில் அதிக நெல், மிளகாய், பருத்தி போன்ற பயிர்களை பயிரிட்டு வருகின்றனர். கடந்தாண்டை தவிர அதற்கு முன்பு நான்கு ஆண்டுகளும் முழு வறட்சியே ராமநாதபுரத்தில் நிலவியது.
நிலத்தடி நீர் பெருமளவில் விவசாயிகளுக்கு கை கொடுக்காததால் விவசாயிகள் மிகப்பெரிய அளவில் நஷ்டத்தை சந்தித்தனர். விவசாயிகள் வாழ்வு பாதிக்கப்படாத வண்ணம், வேளாண் பொறியியல் துறை மூலமாக பண்ணைக்குட்டை அமைப்பது குறித்து விவசாயிகளுக்கு எடுத்துரைக்கப்பட்டது. ஒரு லட்சம் செலவில் இரண்டு அடி ஆழம் 30 அடி நீள அகலம் கொண்ட பண்ணைக்குட்டை வெட்டித் தரும் முறை குறித்து விவசாயிகளுக்கு எடுத்துரைக்கப்பட்டு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
இது குறித்து பெரிய அளவில் விழிப்புணர்வு இல்லாததால் 2018-19ஆம் ஆண்டுகளில் 486 விவசாயிகள் மட்டுமே பயன்பெற்றனர். கடந்த ஆண்டில் புதிதாக 2001 விவசாயிகள் பண்ணைக்குட்டை வெட்டிக்கொண்டனர். இதன் மூலமாக மழைவரும் காலங்களில் நெற்பயிர்களை விவசாயம் செய்தும், மழை இல்லாத காலங்களில் பண்ணைக்குட்டைகளில் உள்ள நீரைக் கொண்டு மிளகாய், பருத்தி, போன்ற பயிர்களை பயிர் செய்து நல்ல முறையில் மகசூல் செய்து வருகின்றனர்.
இதுதவிர பண்ணைக் குட்டைகளில் வளர்ப்பதற்கு மீன்வளத்துறை மூலம் மீன்குஞ்சுகள் கொடுக்கப்படுகின்றன. இதன்மூலம் ஆண்டுக்கு 50 ஆயிரம் ரூபாய் முதல் ஒரு லட்சம் ரூபாய் வரை மீன் விற்று விவசாயிகள் கூடுதலாக வருவாய் ஈட்டி வருகின்றனர். பண்ணைக் குட்டைத் திட்டம் ராமநாதபுரம் விவசாயிகளுக்கு ஒரு வரப்பிரசாதமாகவே இருந்து வருகிறது.
இந்த திட்டத்தின் மூலம் பயனடைந்துள்ள முதுகளத்தூர் அருகேயுள்ள நல்லூர் கிராமத்தைச் சேர்ந்த விவசாயி கணபதி, "20 ஆண்டுகளுக்கும் மேலாக விவசாயம் செய்துவருகிறேன். தற்போது பண்ணைக் குட்டைகளில் நீரை சேமித்து அதன் மூலம் மிளகாய், பருத்தி போன்ற பயிர்களை சாகுபடி செய்துவருகிறேன்.
மேலும், ராமநாதபுரம் மாவட்டம் மீன்வளத்துறை மூலமாக கொடுக்கப்பட்ட 500 மீன் குஞ்சுகளை பெற்று மீன்களை வளர்த்து அதன் மூலம் ஆண்டுக்கு 50 ஆயிரம் வரை தனியாக வருவாய் ஈட்டி வருகிறேன். மொத்தமாக ஒரு ஆண்டிற்கு விவசாயம் மற்றும் மீன் மூலமாக ஒரு லட்சத்து 60 ஆயிரம் வரை வருவாய் ஈட்டி வருகிறேன்" என்றார்.