ஈரோடு மாவட்டம், கோபிச்செட்டிப்பாளையம் அருகே உள்ள காசிபாளையத்தைச் சேர்ந்தவர் நாகராஜ். இவர் காசிபாளையத்தில் உரிய மருத்துவ அனுமதியின்றி பொதுமக்களுக்கு ஆங்கில மருத்துவம் பார்த்து வருவதாக காசிபாளையம் அரசு ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவ அலுவலர் மருத்துவர் யசோதா பிரியாவுக்கு ரகசியத் தகவல் கிடைத்ததுள்ளது.
இதன்பேரில் சுகாதார ஆய்வாளர், வட்டார சுகாதார மேற்பார்வையாளர், கிராம நிர்வாக அலுவலர் ஆகியோர் நாகராஜின் கிளினிக்கை சோதனை செய்தனர். அப்போது அரசு அனுமதியின்றி சில மாத்திரைகளை அவர் வைத்திருந்தது தெரியவந்தது.
மேலும் அவர், பட்டபடிப்பு எதுவும் படிக்காமல், மருத்துவ சான்றும் இல்லாமல் மருந்துகளைப் பயன்படுத்தி பொதுமக்களை ஏமாற்றி மருத்துவம் பார்த்ததும் தெரியவந்துள்ளது. இதன் பின்னர் கிளினிக்கை சோதனை செய்த அலுவலர்கள், அங்கிருந்த மருந்துகளை பறிமுதல் செய்தனர். இது குறித்து மருத்துவர் யசோதா பிரியா கடத்தூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.