தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

கடலில் வீசப்பட்ட தங்க குவியல்.. நடுக்கடலில் சிக்கிய கடத்தல் கும்பல்..! - Rameswaram gold smuggling

இலங்கையில் இருந்து கடல்வழியாக சுமார் 10 கோடி ரூபாய் மதிப்புள்ள 18 கிலோ தங்கத்தை கடத்திவந்தவர்கள் கடலோர காவல் படையினரை பார்த்ததும் கடலில் வீசினர். இதை கடலோர காவல் படையினர் வருவாய் புலனாய்வுத்துறையினர் உடன் இணைந்து மீட்டனர்.

18 kg of gold worth Rs 10 crores thrown into the sea by robbers found by indian coast guard along with dri
கடலில் வீசிய கொள்ளை கும்பல்

By

Published : Feb 9, 2023, 7:55 PM IST

Updated : Feb 9, 2023, 8:31 PM IST

ராமநாதபுரம்:இது தொடர்பாக வருவாய் புலனாய்வு இயக்குநரகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், இலங்கையிலிருந்து மண்டபம் நோக்கி பெரும் அளவிலான தங்கக்கட்டிகள் மீன்பிடி படகில் கடத்தி வரப்படுவதாக ரகசிய தகவல் கிடைத்துள்ளது. இதனடிப்படையில், மத்திய வருவாய் புலனாய்வு துறை அதிகாரிகள், இந்திய கடலோர காவல்படையினர், மண்டபம் தென் கடல் பகுதியில் நேற்று முன் தினம் இரவு ரோந்து பணியில் ஈடுபட்டனர் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

கடலோர காவல்படைக்கு சொந்தமான 'சார்லி 432' கப்பல் மூலம் நடுக்கடலில் வைத்து சந்தேகத்திற்குரிய மீன்பிடிப்படகு பிப்ரவரி 8-ம் தேதி அதிகாலையில், வழிமறிக்கப்பட்டது. படகை நிறுத்தி பாதுகாப்புத்துறை அதிகாரிகள் சோதனை செய்ய முயன்றபோது படகில் இருந்தவர்கள் ஒரு மூட்டையை தூக்கி கடலில் எறிந்தனர்.

இதையடுத்து அப்படகை இந்திய கடலோர காவல் படையினர் சுற்றி வளைத்து, படகிலிருந்த 3 பேரை பிடித்து விசாரித்தனர். விசாரணையில் அவர்கள் மண்டபம் அருகே வேதாளையைச் சேர்ந்த ஒருவருக்கு இலங்கையில் இருந்து தங்க கட்டி கடத்தி வந்ததும், கடலில் ரோந்து படகை கண்டதும், தங்கக்கட்டி மூட்டையை கடலில் வீசியதும் தெரிய வந்தது.

இதன்படி படகில் இருந்து கடலில் வீசிய மூட்டையை மத்திய வருவாய் புலனாய்வு துறை அதிகாரிகள், இந்திய கடலோர காவல் படை வீரர்கள் நேற்று அதிகாலை முதல் தேடத்துவங்கினர். இரண்டாவது நாளாக கடத்தல்காரர்களை உடன் அழைத்து சென்று மூட்டையை வீசிய இடத்தை தேடினர். தீவிர தேடுதல் வேட்டைக்கு பின் தென் கடல் பகுதியில், கடற்படை டைவிங் வீரர்கள் ஒரு மூட்டையை கண்டெடுத்தனர். அதில் 14 பொட்டலங்கள் இருந்தன. அதில் வெளிநாட்டில் இருந்து கடத்தி வரப்பட்ட தங்க கட்டிகள், செயின்கள் என 17.74 கிலோ தங்கம் இருந்துள்ளது. அதன் மதிப்பு தோராயமாக ரூ.10.1 கோடி இருக்கும் எனவும்; சுங்கச் சட்டம் 1962-ன் படி அவை பறிமுதல் செய்யப்பட்டது என்றும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த தங்க கடத்தலில் ஈடுபட்ட மூன்று பேரையும் இது குறித்து பாதுகாப்பு அதிகாரிகள் மேலும் விசாரித்து வருகின்றனர். 2022 - 2023ஆம் நடப்பாண்டில் சென்னை மண்டல வருவாய் புலனாய்வு பிரிவு இதுவரை 209 கிலோ வெளிநாட்டில் இருந்து கடத்தி வந்த தங்கத்தினை பறிமுதல் செய்துள்ளதாகவும், இந்தியா முழுவதும் தோராயமாக 950 கிலோ கடத்தல் தங்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாகவும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: காதலிக்கு அரிவாள் வெட்டு.. 2 குழந்தைகள் கொலை; திருமணம் மீறிய உறவால் விபரீதம்!

Last Updated : Feb 9, 2023, 8:31 PM IST

ABOUT THE AUTHOR

...view details