ராமநாதபுரம்: தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை, ‘என் மண், என் மக்கள்’ என்ற பெயரில் ஊழலுக்கு எதிராகவும், மத்திய பாஜக அரசின் சாதனைகளை மக்களிடம் விளக்கும் வகையிலும் தமிழ்நாட்டின் 234 தொகுதிகளிலும் நடைபயணம் மேற்கொள்கிறார். இதன், தொடக்கவிழா பொதுக் கூட்டம் ராமேஸ்வரத்தில் இன்று (ஜூலை 28) நடைபெற்றது. இதில், கலந்துகொண்டு, அண்ணாமலையின் நடைபயணத்தை தொடங்கி வைப்பதற்காக மத்திய அமைச்சர் அமித் ஷா இன்று தமிழ்நாடு வந்துள்ளார்.
நாடாளுமன்றத் தேர்தலுக்கு சில மாதங்களே உள்ள நிலையில், தமிழ்நாட்டில் தங்கள் கட்சியை பலப்படுத்தும் விதமாக பாஜக தலைவர் அண்ணாமலை நடைபயணம் மேற்கொள்ள உள்ளார். 'என் மண், என் மக்கள்' என்ற நடைபயணமானத்தை இன்று மாலை ராமேஸ்வரத்தில் இருந்து உள்துறை அமைச்சர் அமித்ஷா தொடங்கி வைத்தார்.
பின்னர், அவர் பேசுகையில், “முதலமைச்சர் ஸ்டாலின், தனது ரகசியங்களை செந்தில் பாலாஜி வெளியிடுவார் என்ற பயத்தில்தான் அவரை அமைச்சர் பதவியில் இருந்து நீக்கம் செய்யவில்லை. திமுக அமைச்சர்களில் ஒருவரை அமலாக்கத்துறை அதிகாரிகள் ஊழல் வழக்கில் கைது செய்துள்ளனர். இருந்தபோதிலும், கைது செய்யப்பட்ட செந்தில் பாலாஜி சிறையில் இருந்தபோதிலும், அவர் அமைச்சராகவே இருக்கிறார். ஆனால், ஸ்டாலின் அவரை பதவியில் இருந்து நீக்கவில்லை. ஏனென்றால், ஸ்டாலின் பற்றிய அனைத்து ரகசியங்களையும் அமைச்சர் செந்தில் பாலாஜி வெளியிட்டுவிடுவார் என அஞ்சுகிறார்.
காங்கிரஸ் மற்றும் திமுக என்றாலே மக்களுக்கு காமன்வெல்த் ஊழல், 2ஜி ஊழல், நிலக்கரி ஊழல், ஹெலிகாப்டர் ஊழல், நீர்மூழ்கிக் கப்பல் ஊழல், இஸ்ரோ ஊழல் உள்ளிட்ட ஊழல்கள் தான் நினைவுக்கு வருகிறது. தமிழ்நாட்டை குடும்ப அரசியல், ஊழலற்ற தமிழ்நாடாக மாற்றவே கட்சியின் யாத்திரை மேற்கொள்ளப்படுகிறது.