மத்திய கப்பல் போக்குவரத்துத் துறை சார்பாக, தனுஷ்கோடி பழைய தேவாலயம் எதிரில் அமையவுள்ள புதிய கலங்கரை விளக்கத்திற்கான அடிக்கல் நாட்டு விழா இன்று நடைபெற்றது. இவ்விழாவில் பங்கேற்ற கப்பல் போக்குவரத்துத் துறை இணை அமைச்சர் மன்சுக் எல் மாண்டவியா, புதிய கலங்கரை விளக்கம் அமைக்கும் பணியைத் தொடங்கி வைத்தார்.
பின்னர் செய்தியாளர்களுக்கு அவர் அளித்த பேட்டியில் கூறியதாவது, 'தனுஷ்கோடியில் 7.1 கோடி ரூபாய் செலவில், 50 மீட்டர் உயரத்தில் மின் தூக்கி வசதியுடன் புதிய கலங்கரை விளக்கம் அமைக்கப்படுகிறது. இவற்றின் மேல் நின்று ராமேஸ்வரத்தின் ஓட்டு மொத்த அழகையும் சுற்றுலாப் பயணிகள் பார்த்து ரசிக்க முடியும்.
இங்கு குழந்தைகளுக்கென பூங்காவும் அமையவுள்ளது. புதிய கலங்கரை விளக்கத்தின் ஒளி, 18 நாட்டிகல் தூரம் வரை பாயும் திறன் கொண்டது. ராமநாதபுரம் மாவட்டம், மத்திய அரசின் சிறப்பு கவனம் செலுத்த வேண்டிய மாவட்டங்களின் பட்டியலில் உள்ளதால், இம்மாவட்டத்தை மேம்படுத்த பல திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன.