'தானத்தில் சிறந்தது அன்னதானம்' என்போம். அந்த வகையில் வியாபார லாப நோக்கம் இன்றி இன்றைய காலகட்டத்திலும் ஆங்காங்கே சிலர் பலரது வயிற்றுப்பசிசை ஆற்றி வருகின்றனர். கோவையைச் சேர்ந்த கமலாத்தாள் பாட்டி ஒரு ரூபாய்க்கு இட்லி வழங்கி இன்று இந்திய அளவில் அறியப்படும் ஒரு நபராக மாறியிருக்கிறார். இவரது தன்னலமற்ற சேவைக்கு பல்வேறு தரப்பினரும் தலைவணங்கி உதவி வருகின்றனர்.
இவரைப் போன்றே ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரம் அக்னி தீர்த்தக் கடல் கரைக்கு எதிரே ராணி(70) என்ற மூதாட்டி பல ஆண்டுகளாக இட்லிக் கடை நடத்தி வருகிறார். இவரது பெற்றோரும் இதற்கு முன்பு இட்லிக் கடை நடத்தி வந்துள்ளனர். தனுஷ்கோடியை 1964இல் புயல் தாக்கிய போது இவர்களின் வீடு மொத்தமும் சூறையாடப்பட்டிருக்கிறது. பின் அங்கிருந்து இடம் பெயர்ந்து அகத்தியர் தீர்த்தத்தில் அரசு ஒதுக்கிய சுனாமி குடியிருப்பில் தங்கி, அக்னி தீர்த்தத்துக்கு அருகே தார்பாயில் சிறு கடை ஒன்றை அமைத்து கடந்த 36 ஆண்டுகளாக உணவகம் நடத்தி வருகிறார் ராணி பாட்டி.
இதுவும் சாதாரண இட்லிக் கடைதான் என்ற போதிலும், இங்கு வரும் ஆதரவற்றோர், முதியோர், மாற்றுத்திறனாளிகளுக்கு 35 ஆண்டுகளுக்கும் மேலாக இலவசமாக இட்லி பரிமாறி அவர்களது பசியாற்றி வருகிறார் இந்த மூதாட்டி. இது பாட்டி மக்கள் மீது கொண்டுள்ள அன்பையும், மனிதாபிமானத்தையும் காட்டும் செயலாக இருப்பதாக கடையில் உணவு அருந்த வரும் பிற வாடிக்கையாளர்கள் தெரிவிக்கின்றனர்.