ராமநாதபுரம்:விதியை மீறி கடற்கரையேரமாக மீன்பித்த விசைப்படகு மீனவர்கள் 10 பேரை நாட்டுப்படகு மீனவர்கள் சிறைபிடித்து மீன்வளத்துறை அலுவலர்களிடம் ஒப்படைத்தனர்.
தமிழ்நாட்டில் கடல் மீன்பிடி ஒழுங்குமுறைச் சட்டம் -1983 நடைமுறையில் உள்ளது. இந்தச் சட்டத்தின் படி, கடற்கரையில் இருந்து ஐந்து நாட்டிகல் தூரம்வரை நாட்டுப்படகு மீனவர்கள் மீன்பிடிக்க வேண்டும். ஐந்து நாட்டிகல் தாண்டியே விசைப்படகு மீனவர்கள் மீன்பிடிக்க வேண்டும் என வரையறை செய்யப்பட்டுள்ளது.
இந்த விதிகளை மீறி சில விசைப்படகு மீனவர்கள் செயல்படுவதால், நாட்டுப்படகு மீனவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதாக கூறப்படுகிறது. இதனால் தென்மாவட்ட கடற்கரையோர கிராமங்களில் நாட்டுப்படகு, விசைப்படகு மீனவர்களுக்கிடையில் மோதல் போக்கு நீடித்து வருகிறது.
இந்த நிலையில் கடல் மீன்பிடி ஒழுங்குமுறைச் சட்டம் - 1983 விதிகளை மீறி ராமேஸ்வரம் அடுத்த சங்குமால், ஒலைக்குடா பகுதிகளில் கரையிலிருந்து ஐந்து நாட்டிகல் தொலைவிற்குள்ளாக, இசக்கிமுத்து, முகமது அஜமல்கான் ஆகியோருக்குச் சொந்தமான விசைப்படகுகளில் 10 மீனவர்கள் மீன்பிடித்துக் கொண்டிருந்தனர்.