கரோனா வைரஸ் பாதிப்பைத் தடுக்க பரமக்குடியில் எடுக்கப்பட்ட நடவடிக்கைகளை மதுரை மண்டல கரோனா வைரஸ் தடுப்பு அலுவலர் காமராஜ், மாவட்ட ஆட்சியர் வீர ராகவ ராவ், மண்டல காவல்துறை தலைவர் முருகன் தலைமையில் தென் மண்டல டிஐஜி சண்முக ராஜேஷ்வரன் ஆகியோர் ஆய்வு செய்தனர். இதனைத் தொடர்ந்து, ராமநாதபுரம் ஆட்சியர் அலுவலகத்தில் அனைத்துத் துறை அரசு அலுவலர்கள் பங்கேற்ற ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது.
இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் வீர ராகவ ராவ் பேசுகையில், ''வெளிநாடுகளில் இருந்து இதுவரை ராமநாதபுரம் மாவட்டத்திற்கு 4,777 நபர்கள் திரும்பியுள்ளனர். மாவட்ட நிர்வாகத்தின் மூலம் அவர்களது வீடுகளில் ஸ்டிக்கர் ஒட்டப்பட்டு அடையாளப்படுத்தி நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளன. தற்போது 204 நபர்கள் அவரவர் வீடுகளில் கண்காணிக்கப்பட்டு வருகின்றனர். மீதமுள்ள 4,573 நபர்கள் 28 நாட்கள் தனிமைப்படுத்தும் காலம் நிறைவடைந்து கரோனா தொற்று இல்லாமல் நலமுடன் உள்ளனர்.
ஆய்வில் ஈடுபட்ட கரோனா தடுப்பு குழு இதனைத் தவிர்த்து டெல்லி சமய மாநாட்டில் இருந்து திரும்பியவர்களில் கீழக்கரை பகுதியில் இதுவரை மொத்தம் 737 நபர்களுக்கு கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. அதில் 10 நபர்களுக்கு கரோனா தொற்று உள்ளது எனவும், 301 நபர்களுக்கு தொற்று இல்லை எனவும் உறுதி செய்யப்பட்டுள்ளது. மீதமுள்ள 426 நபர்களுக்கான பரிசோதனை முடிவுகள் வரவேண்டியுள்ளன. மாவட்டத்தில் இதுவரை நோய் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள 10 நபர்கள், சிவகங்கை அரசு மருத்துவக் கல்லூரி மருத்தவமனையில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர். அதில் பரமக்குடி பகுதியைச் சார்ந்த 2 நபர்கள் பூரண குணமடைந்ததை அடுத்து சொந்த ஊருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். மீதமுள்ள 8 நபர்களுக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு சீரான உடல்நிலையில் உள்ளனர்'' என்றார்.
கரோனா தடுப்பு நடவடிக்கைகளை ஆய்வு செய்யும் வைரஸ் கரோனா தடுப்பு அலுவலர் அதனைத் தொடர்ந்து, கரோனாவைத் தடுக்க மதுரை மண்டலத்திற்கு நியமிக்கப்பட்டுள்ள சிறப்பு அலுவலர் காமராஜ் பேசுகையில், ''நோய் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள பகுதிகளில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேலும் தீவிரப்படுத்திட வேண்டும். சம்பந்தப்பட்ட உள்ளாட்சித் துறை நிர்வாகத்தின் மூலம் கிருமிநாசினி தெளிக்கும் பணிகளை தொடர்ந்து மேற்கொள்ள வேண்டும். பொதுமக்கள் அத்தியாவசிய தேவையில்லாமல் பயணம் செய்ய வேண்டாம். கரோனா தொற்று கண்டறியப்பட்டு கட்டுப்பாட்டில் உள்ள பகுதிகளில் வசிக்கும் பொதுமக்கள் அத்தியாவசியத் தேவைகளுக்காக வீட்டிலிருந்து வெளியே செல்லும்போது கட்டாயம் முகக் கவசம் அணிந்திட அறிவுறுத்த வேண்டும்'' எனத் தெரிவித்தார்.
இதையும் படிங்க:தமிழ்நாட்டில் மேலும் 56 பேருக்கு கரோனா உறுதி