ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் இன்று மாவட்ட ஆட்சித் தலைவர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் தலைமையில், தென்மேற்கு பருவமழை காலத்தையொட்டி மாவட்டத்தில் மேற்கொள்ள வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து அனைத்துத் துறை அலுவலர்களுடன் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள்
இக்கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர் தெரிவித்ததாவது: "தென்மேற்கு பருவமழை காலத்தையொட்டி மாவட்ட அளவில் கனமழை, புயல், வெள்ளம் போன்ற பேரிடர் சூழ்நிலைகளை எதிர்கொள்ள ஏதுவாக உரிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள அறிவுறுத்தியுள்ளது. ராமநாதபுரம் மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழை காலத்தில்தான் அதிக மழை பொழிவிருக்கும்.
மாவட்டத்தில் பேரிடர் காலத்தில் மீட்பு, பாதுகாப்பு நடவடிக்ககைகளை மேற்கொள்ள மண்டல அளவில் துணை ஆட்சியர் நிலை அலுவலர்கள் தலைமையில் 15 குழுக்கள் செயல்படுத்தப்பட்டுள்ளன.
மண்டல குழு அலுவலர்கள் தங்களது பகுதியில் ஆய்வு மேற்கொண்டு தாழ்வான பகுதிகள் ஏதேனும் கண்டறியப்பட்டால், அதனை பட்டியலில் சேர்த்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை ஒருங்கிணைத்திட வேண்டும்.
32 நிவாரண மையங்கள்
எளிதில் பாதிக்கக் கூடிய பகுதிகளில் உள்ள மக்களை பாதுகாப்பாக மீட்டு தங்க வைக்க 32 நிவாரண மையங்கள் உள்ளன. மண்டல அலுவலர்கள் தங்களது கட்டுப்பாட்டிற்குட்பட்ட பகுதிகளில் உள்ள பல்நோக்கு பாதுகாப்பு மையங்கள், நிவாரண மையங்களை நேரில் சென்று ஆய்வு செய்து, அம்மையங்களின் நிலை குறித்து உறுதி செய்திட வேண்டும்.
மேலும், தேவைக்கேற்ப பள்ளிகள், திருமண மண்டபங்கள் போன்ற கட்டடங்களை கூடுதல் நிவாரண மையங்களாக பயன்படுத்திடும் வகையில் தயார் நிலையில் இருந்திட வேண்டும்.
தென்மேற்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்த ஆலோசனைக் கூட்டம் இதுதவிர, அவசர கால நிலையினை கருத்தில் கொண்டு போர்க்கால அடிப்படையில் நோய்த்தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கும், பொதுமக்கள் மற்றும் கால்நடைகளுக்கு தேவையான போதிய அளவு மருந்து, மாத்திரைகளை தயார் நிலையில் வைத்திடவும் பொது சுகாதாரம், கால்நடை பராமரிப்புத் துறை சார்ந்த அலுவலர்கள் உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.
மாவட்ட நீர்நிலைகளை கண்காணித்தல்
சாலை போக்குவரத்து பாதிக்கப்படும் சூழ்நிலை ஏதேனும் ஏற்படும் பட்சத்தில், அதனை உடனடியாக சீர்செய்திட தேவையான நவீன உபகரணங்களை தயார் நிலையில் வைத்திட தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் துறை, நெடுஞ்சாலைத்துறை சார்ந்த அலுவலர்கள் உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.
மாவட்டத்தில் உள்ள கண்மாய், ஊரணிகள் உள்ளிட்ட நீர்நிலைகளில் நீரளவினை கண்காணித்திடவும், நீர்வழித்தடங்களில் தடையில்லாமல் பராமரித்திடவும் பொதுப்பணித்துறை, நீர்வள ஆதார அமைப்பு சார்ந்த அலுவலர்கள் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.
பேரிடர் பாதிப்பு குறித்து புகாரளிக்க
பொது மக்கள், கடலோரப் பகுதிகளிலுள்ள மீனவர்களுக்கு வானிலை முன்னெச்சரிக்கை தொடர்பான அறிவிப்புகளை முறையே அறிவித்திட வேண்டும்.
அதேபோல, பொதுமக்கள் பேரிடர் பாதிப்பு குறித்த புகார்களை 1077 கட்டணமில்லா தொலைபேசி எண்ணிலும் 04567-230060 என்ற தொலைபேசி எண்ணிலும் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் செயல்பட்டு வரும் மாவட்ட பேரிடர் மேலாண்மை செயலாக்க பிரிவினை தொடர்புகொண்டு தெரிவிக்கலாம்" என மாவட்ட ஆட்சித் தலைவர் தெரிவித்தார் .
இக்கூட்டத்தில், கூடுதல் ஆட்சியர் பிரதீப்குமார் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கார்த்திக் உள்பட அனைத்துத் துறை சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர்.