டி.என்.பி.எஸ்.சி மூலம் துணை ஆட்சியர் நிலை அலுவலர் பணியிடங்களுக்கான குரூப்-1 முதல்நிலை தேர்வு ஜனவரி மாதம் 3ஆம் தேதி நடைபெறவுள்ளது. தேர்வுக்கான முன்னேற்பாடு நடவடிக்கைகள் குறித்து ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
இக்கூட்டத்திற்கு ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் தலைமைத் தாங்கினார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், “தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தின் மூலம் துணை ஆட்சியர் நிலை அலுவலர் பணியிடங்களுக்கான குரூப்-1 முதல்நிலை தேர்வில் பங்கேற்க மொத்தம் 4,464 நபர்கள் விண்ணப்பித்துள்ளனர்.
தேர்வினை அமைதியான முறையில் நடத்துவதற்காக மொத்தம் 16 தேர்வு மையங்கள் தயார் செய்யப்பட்டுள்ளன. தேர்வில் முறைகேடுகள் ஏதும் நடைபெறாமல் தடுப்பதற்காக 2 பறக்கும் படை குழுக்கள், ஒவ்வொரு தேர்வுக் கூடத்திற்கும் ஒரு அலுவலர் வீதம் 16 ஆய்வு அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
வினாத்தாள்கள், விடைத்தாள்கள் ஆகியவை சம்பந்தப்பட்ட தேர்வு மையங்களுக்கு கொண்டு செல்வதற்கு ஆயுதம் ஏந்திய காவல் பாதுகாப்புடன் 3 நகர்வு குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. தேர்வு நடைபெறும் அனைத்து தேர்வு கூடங்களுக்கும் காவல்துறை மூலம் கூடுதல் பாதுகாப்பு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
குரூப்-1 தேர்வு முன்னேற்பாடு நடவடிக்கைகள் குறித்து ஆட்சியர் தலைமையில் ஆலோசனை கூட்டம்! அனைத்து தேர்வு மையங்களிலும் குடிநீர் வசதி, கழிப்பறை வசதி போன்ற அடிப்படை வசதிகள் உறுதி செய்யப்பட்டுள்ளன. மேலும் தேர்வில் பயன்படுத்தப்பட்ட விடைத்தாள்கள் பாதுகாப்பு ஆணையத்திற்கு கொண்டு செல்வதற்கு மூடிய பட்டய வாகனத்திற்கு ஆயுதம் ஏந்திய காவல் பாதுகாப்புடன் ஒரு துணை வட்டாட்சியர் நிலை அலுவலர் மற்றும் ஒரு சார்பு ஆய்வாளர் நிலை அலுவலர் உடன் பாதுகாப்பு வாகனம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அனைத்து தேர்வு மையங்களிலும் அரசு விதித்துள்ள கரோனா வைரஸ் தொற்று தடுப்பு நடைமுறை தவறாமல் பின்பற்ற வேண்டும். அதேபோல தேர்வு நடைமுறைகளில் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் அறிவித்துள்ள விதிமுறைகளை எவ்வித சமரசமுமின்றி முறையே பின்பற்றிட வேண்டும்” என தெரிவித்தார்.
இக்கூட்டத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கார்த்திக் உள்ளிட்ட அலுவலர்கள் கலந்துகொண்டனர்.
இதையும் படிங்க :மௌனத்தால் உலகை வென்ற ரமணர் - ரமணரின் ஜெயந்தி விழாவில் இசைஞானி ஆராதனை