இந்தியாவின் பொருளாதாரத்தில் முக்கியப் பங்கு வகிக்கிறது மீன் ஏற்றுமதி. மீனவர்களின் பொருளாதாரத்திற்கும் இதுவே அடிநாதம். இதைப் புரிந்துகொண்டு மத்திய அரசு ஜூன் 1ஆம் தேதிமுதல் 'மீனவர்கள் அனைவரும் கடலுக்கு மீன்பிடிக்கச் செல்லலாம்’ என்று அறிவிப்பு வெளியிட்டது.
ஆனால் ராமநாதபுரம் மாவட்டத்தில் இந்த அறிவிப்பு கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. அம்மாவட்டத்தில் இரண்டாயிரத்து 500 விசைப்படகுகள் உள்ளன. அதில் பாதி விசைப்படகுகளுக்குப் பழுதுநீக்கும் பணி இன்னும் முடியவில்லை.
விசை படகுகளை சீரமைக்கும் மீனவர்கள் ஊரடங்கினால் படகுகளைச் சீரமைக்கும் பொருள்களை வாங்க முடியாமல் போயிருந்தது. இதனால் மொத்த படகுகளில் பாதி கரையில் விடப்பட்டிருக்கின்றன. இதனால் ஜூன் 15ஆம் தேதிக்குப் பிறகுதான் மீன்பிடிக்கச் செல்ல முடியும் என மீனவச் சங்கம் தெரிவித்துள்ளது.
இது குறித்து மீனவர் ஜான் பிரிட்டோ, ”அரசு மீன்பிடிக்கச் செல்ல அனுமதித்ததை நாங்கள் வரவேற்கிறோம். ஆனால், ஊரடங்கு தளர்வுக்குப் பிறகுதான் விசைப் படகுகளைச் சீரமைக்கும் பணியினை தொடங்கியிருக்கிறோம். இந்தச் சீரமைப்புப் பணி மண்டபம், பாம்பன், ராமேஸ்வரம், துறைமுகப் பகுதிகளில் நடைபெற்றுவருகின்றன.
விசை படகுகளை சீரமைக்கும் மீனவர்கள் ஒவ்வொரு படகையும் சீரமைக்க ஒரு லட்சம் ரூபாயாவது ஆகும். மீனவர்களிடம் அதற்கான கையிருப்பு இல்லை. கடன் வாங்கி சீரமைத்துக் கொண்டிருக்கிறோம். அவ்வாறு சீரமைத்து மீன்பிடிக்கச் சென்றாலும் ஏற்றுமதி எப்படியிருக்கும் என எங்களுக்குத் தெரியாது. அரசுதான் எங்கள் வாழ்வாதாரத்தை மீட்க உதவ வேண்டும்” என்றார்.
இந்த இக்கட்டான சூழல் குறித்து அனைத்து விசைப்படகு மீனவர் சங்கத்தின் செயலாளர் சேசு ராஜா, ”ஊரடங்கினால் மீனவர் சமுதாயம் மிகப்பெரிய இழப்பைச் சந்தித்துள்ளது. அரசு கரோனா ஊரடங்கிற்காக வழங்கிய ஆயிரம் ரூபாய், மீன்பிடித் தடைக்காலத்திற்கு வழங்கிய ஐந்தாயிரம் ரூபாயை வைத்து காலம் தள்ளினோம். மாவட்ட ஆட்சியரிடம் ஜூன் 1ஆம் தேதி அறிவித்த அறிவிப்பை மாற்றக்கோரியுள்ளோம். அதற்குப் பதிலாக ஜூன் 15ஆம் தேதியிலிருந்து மீன்பிடிக்கச் செல்லவிருப்பதாகத் தெரிவித்திருக்கிறோம்.
குறிப்பாக ராமேஸ்வரம், மண்டபம், பாம்பன் உள்ளிட்ட பகுதிகளில் முதல் தரத்தில் கணவாய், மீன், இறால் போன்ற வகைகள் கிடைக்கும். ஆனால் அதனை ஏற்றுமதிசெய்யும் நிறுவனங்களில் 50 விழுக்காடு நபர்கள் மட்டும் வேலை பார்க்கின்றனர்.
மீனவர்கள் சந்திக்கும் இன்னல்கள் குறித்த காணொலி இதனால் ஒருவேளை ஜூன் 15ஆம் தேதிக்குப் பின்னர் கடலுக்குச் சென்றாலும் 12 மணிநேரம் மட்டும் மீன்பிடித்தால் போதும் என்று மீன் ஏற்றுமதியாளர்கள் கேட்டுக் கொண்டுள்ளனர். ஏற்றுமதி செய்யுமிடங்களில் அதிக அலுவலர்களை நியமித்து அரசு ஏற்பாடு செய்ய வேண்டும்” என்றார்.
மீனை ஏற்றுமதி செய்வதில் சிக்கல், மீனை விற்பதில் சிக்கல் என மீனவர்களின் வாழ்க்கை மீனோடு மீனாகச் செத்துக் கொண்டிருக்கிறது. மத்திய, மாநில அரசுகள் கலந்தாலோசித்து உதவினால் மட்டுமே மீன் ஏற்றுமதியில் மட்டுமல்ல, மீனவர்களின் வாழ்வாதாரத்திலும் முன்னேற்றம் ஏற்படும். அதுவே மீனவர்களை, இனிவரும் காலங்களிலும் கடல் ராசாக்களாக கம்பீரப்படுத்தும்.
இதையும் படிங்க: 'நாப்கின் வாங்கக்கூட காசில்லாமல் சிரமப்பட்டோம்' - வலியுடன் போராடியவர்களுக்கு உதவிய மனிதநேயர்கள்!