ராமநாதபுரம் மாவட்டம் முழுவதும் கரோனா பாதிப்பு நாளுக்கு நாள் மின்னல் வேகத்தில் பரவி வருகிறது. தற்போது வரை மாவட்டத்தில் 338 பேர் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். அதில் 144 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.
190 பேர் ராமநாதபுரம், பரமக்குடி, சிவகங்கை ஆகிய பகுதிகளில் உள்ள அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுவரை மாவட்டத்தில் நான்கு பேர் இந்த வைரஸ் தொற்றால் உயிரிழந்துள்ளனர்.
இந்நிலையில், இன்று உச்சப்புளி கடற்படை விமான தளத்தில் பல்வேறு மாநிலங்களில் இருந்து பணிபுரிந்து வந்த 102 வீரர்களில் 29 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த 61 பேருக்கும் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து, மாவட்டத்தில் இன்று ஒரே நாளில் மொத்தமாக 90 பேருக்கு கரோனா நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
வைரசைக் கட்டுப்படுத்த சென்னை பெருநகர மாநகராட்சி, மதுரை, தேனி ஆகிய பகுதிகளைப் போல், ராமநாதபுரத்திலும் முழு ஊரடங்கு அமல்படுத்தப்படுகிறதா என மாவட்ட ஆட்சியர் வீர ராகவ ராவிடம் தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசினோம்.
அப்போது பேசிய அவர், “மாவட்டத்தில் கரோனா வைரசைக் கட்டுப்படுத்த தேவையான அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருகின்றன. கூடுதலாக 900 படுக்கைகள் ராமநாதபுரம், பரமக்குடி ஆகிய கரோனா தடுப்பு மையங்களில் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.
குறிப்பாக, சென்னையிலிருந்து மாவட்டத்திற்கு வருபவர்களால் தொற்றுப் பரவல் அதிகளவில் ஏற்படுகிறது. ராமநாதபுரத்திற்கு முழு ஊரடங்கு தற்போது அவசியமில்லை. மக்கள் தகுந்த இடைவெளி, முகக்கவசம், கைகளைச் சுத்தமாக பராமரித்தாலே தொற்று பரவும் வேகத்தைக் கட்டுப்படுத்தலாம். இனி வரும் நாள்களில் கரோனா தொற்றால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை அதிகமாக வாய்ப்பு உள்ளது” என்றார்.